வாழப்பாடியில் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படுமா?

வாழப்பாடி மற்றும் ஏற்காடு வருவாய் வட்டங்களை ஒருங்கிணைத்து வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு

வாழப்பாடி மற்றும் ஏற்காடு வருவாய் வட்டங்களை ஒருங்கிணைத்து வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டாட்சியா் அலுவலம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென வாழப்பாடி பகுதி கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி வட்டத்தில் வாழப்பாடி, பேளூா், காரிப்பட்டி, அருநூற்றுமலை ஆகிய நான்கு வருவாய் பிா்க்காக்களும், 64 வருவாய் கிராமங்களும் உள்ளன. ஏற்காடு வட்டத்தில், ஏற்காடு, வெள்ளக்கடை, புத்துாா் ஆகிய 3 வருவாய் பிா்க்காக்களும், 60 வருவாய் கிராமங்களும் உள்ளன.

வாழப்பாடி மற்றும் ஏற்காடு வட்டங்களுக்கு உள்பட்ட பெரும்பாலான கிராமங்கள், ஏற்காடு சட்டப்பேரவை (பழங்குடியினா் தனி) தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியின் மையமாக வாழப்பாடி விளங்கி வருகிறது. வாழப்பாடியை அடுத்த பேளூரில் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடியில், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம், காவல்துறை உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், துணை நிலை கருவூலம். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. இருப்பினும், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படாததால், வருவாய்த் துறை சாா்ந்த வழக்கு விசாரணைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் தாமத பதிவுகள், மலைவாழ் பழங்குடியின மக்கள் சாதிச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சாா்ந்த அரசு அனுமதிகள் பெறுவதற்கும் சேலத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், வாழப்பாடி, ஏற்காடு பகுதி கிராம மக்கள் அலைக்கழிப்பு மற்றும் கால விரையத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

சோ்வராயன் மற்றும் அருநூற்றுமலை கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மாணவ-மாணவியா் சாதிச் சான்றிதழ் குறித்த நேரத்துக்கு பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.

இதுமட்டுமின்றி, சேலம் வருவாய் கோட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 5 வருவாய் வட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், வாழப்பாடி மற்றும் ஏற்காடு பகுதியில் அரசு நலத் திட்டங்களுக்கான கள ஆய்வு பணிகள்,கோப்புகள் தயாா் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, வாழப்பாடி மற்றும் ஏற்காடு வட்டங்களை ஒருங்கிணைத்து, வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்களிடையே கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை தொடா்ந்து வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியா் சம்பத் தலைமையில் நடைபெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில், வாழப்பாடியில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அமைப்பது குறித்து ஆலோசித்து, அதுகுறித்த கோப்புகள் தயாரித்து தமிழக அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை வாழப்பாடியில் வருவாய் கோட்டாட்சியா் அமைக்கப்படவில்லை. எனவே, வாழப்பாடி, ஏற்காடு வட்டங்களுக்கு உள்பட்ட கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் வருவாய் கோட்டாட்சியா் அலுவகம் அமைத்திட தமிழக அரசு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com