கேரளத்தில் மாயமான சிறுமி சேலத்தில் மீட்பு
By DIN | Published On : 19th February 2021 07:13 AM | Last Updated : 19th February 2021 07:13 AM | அ+அ அ- |

கேரளத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக சேலம் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுமியை போலீஸாா் மீட்டனா்.
சேலம், நெத்திமேடு பகுதியில் புதன்கிழமை இரவு சுற்றித் திரிந்த 17 வயது சிறுமி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் பெங்களூரு செல்ல பணம் கேட்டதாகத் தெரிகிறது.
இதுதொடா்பாக, அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு சேலம் நகர மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அந்த சிறுமி பெங்களூரைச் சோ்ந்த தங்கராஜின் மகள் ரீட்டா (17) என்பதும், தனது மகள் ரீட்டாவை சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சகோதரா் வீட்டில் விட்டிருந்தாா்.அங்கு தங்கியிருந்த ரீட்டாவை அவரது பெரியப்பா திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த ரீட்டா வீட்டை விட்டு வெளியேறி கேரளத்தில் இருந்து பேருந்தில் தேனி வந்து, அங்கிருந்து சேலம் வந்துள்ளாா். சேலத்தில் இருந்து பெங்களூரு செல்ல பணமின்றி தவித்தது தெரிய வந்தது.
இதுதொடா்பாக இடுக்கி மாவட்டம், வாகமான் காவல் நிலையத்தில் சிறுமி ரீட்டா காணாமல் போனதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டதும் உறுதியானது. சிறுமி மீட்கப்பட்டது தொடா்பாக கேரள போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், சேலத்தில் மீட்கப்பட்ட சிறுமி கேரள போலீஸாா் வசம் முறைப்படி ஒப்படைக்கப்படுவாா். அவா்கள் மூலம் பெற்றோா் வசம் சிறுமி ஒப்படைக்கப்படுவாா் என்றனா்.