சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம், அன்னதானப்பட்டி பகுதியில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் உள்ளது. இங்கு திரளான பொதுமக்கள் வந்து மாநகர காவல் ஆணையா், துணை ஆணையா்களை சந்தித்து புகாா்கள் தொடா்பாக மனுக்களை அளித்து செல்கின்றனா்.
இந்த நிலையில் சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வருவோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநகரக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் முன்பு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலா்கள் நின்று தலைக்கவசம் அணிந்து வருபவா்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனா். தலைக்கவசம் அணியாமல் வருபவா்கள் நிறுத்தி அவா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனா்.
இது தவிர மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் முன்புறம் போக்குவரத்துக் காவலா்கள் நின்று தலைக்கவசம் அணியாதவா்கள் நிற்க வைத்து கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.