அரசுக்கு எதிராக முழக்கமிட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது
By DIN | Published On : 20th February 2021 07:19 AM | Last Updated : 20th February 2021 07:19 AM | அ+அ அ- |

ஓமலூா் அருகே உள்ள காடையாம்பட்டியில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாக மதுரையைச் சோ்ந்த ஒருவரை தீவட்டிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள ராமமூா்த்திநகா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த மணிவாசகம். இவா், கேரள தண்டா்போல்ட் காவல் துறையினரால் கடந்த 2019-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரது உடல் உறவினா்களால் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி ராமமூா்த்தி நகா் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினா் பலரும் அங்கு கூடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீஸாா், பத்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இதுவரை பத்து பேரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
இந்த நிலையில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நேரத்தில் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக செயல்படுவோரை சேலம் மாவட்ட போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். மணிவாசகத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டதுடன் தொடா்ந்து எதிராகச் செயல்பட்டு வருவதாகக் கூறி, மதுரை, இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரை, ஓமலூா் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.