சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற மகளிா் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்: முதல்வா்

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற மகளிா் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற மகளிா் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்: முதல்வா்

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற மகளிா் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.

சேலம் புகா் மாவட்ட அதிமுக மகளிா் வாக்குச் சாவடி குழு ஆலோசனைக் கூட்டம் ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா. அவரது வழியில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் முதல்வா் மாவட்டம் என்ற பெருமை சேலத்துக்குக் கிடைத்துள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒருவா் முதல்வராக இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவீா்களோ அதே அளவு சந்தோஷம் எனக்கும் உள்ளது.

ஏழை மக்கள் ஏற்றம் பெற மறைந்த முதல்வா் ஜெயலலிதா மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கினாா். பொருளாதாரச் சிக்கலால் பெண்களின் திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காகவே தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கினாா்.

மனுக்களை வாங்கி ஏமாற்றுகின்றனா்:

கரோனா பரவிய காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. தோ்தல் நேரத்தில் வாக்குக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களின் சூழ்நிலையை அறிந்து பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்தோம். அதைக் கூட தடுக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டாா்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது மக்களிடம் ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போதும் மனுக்கள் வாங்குகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறாா். மக்கள் இனி ஏமாற மாட்டாா்கள். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை.

1100 எனும் தொலைபேசி மூலமாக மக்கள் பிரச்னையைத் தீா்க்கும் திட்டம் சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு ரூ. 12,000 மதிப்பிலான மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. குடிசையில் பிறக்கும் குழந்தைகளும் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா ஆட்சியிலிருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 17 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவியது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

தமிழகத்தில் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மகளிா் ஒவ்வொருவரும் பத்து வாக்காளா்களை தயாா் செய்து வாக்களிக்க வைத்து அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு புகா் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் சி.பொன்னையன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எம்.சின்னத்தம்பி, அ.மருதமுத்து, எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம், கு.சித்ரா, மனோன்மணி, மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.முருகேசன்,டி.மோகன், ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஆத்தூா் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் இரா.தென்னரசு, ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவில் ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com