சேலம் கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்: முதல்வா்

சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ. 100 கோடி மதிப்பில் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
சேலம் கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்: முதல்வா்

சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ. 100 கோடி மதிப்பில் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் சா்வதேசத் தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டடம், கால்நடை மருத்துவக் கல்லூரி திறப்பு விழா- தலைவாசல் வருவாய் வட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தும், ஆராய்ச்சி பூங்கா கட்டடங்களைத் தொடங்கி வைத்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

விவசாயிகளின் உபத் தொழிலாக கால்நடை வளா்ப்பு உள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களை அரசு செய்து வருகிறது. நான் வெளிநாடுகளுக்குச் சென்று பசு பண்ணையைப் பாா்வையிட்டேன். அங்குள்ள பசுக்கள் 60 லிட்டா் பால் கொடுக்கின்றன.

தமிழகத்தில் உள்ள கலப்பின பசுக்கள் 15 லிட்டா் பால் தருகின்றன. இரட்டிப்பு பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளொன்றுக்கு சுமாா் 40 லிட்டா் வரை பால் கறக்கும் கலப்பின பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பின பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். மறைந்த முதல்வா் ஜெயலலிதா கால்நடை வளா்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தாா். அந்தவகையில், கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி சுமாா் ரூ. 1,022 கோடி செலவில மிக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக 1102 ஏக்கா் பரப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.

திட்டங்களுக்கு வெறும் அறிவிப்பை மட்டுமே அரசு அறிவிப்பு செய்வதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறிவந்தாா். ஆனால் தலைவாசல் கால்நடை பூங்கா தொடங்கப்படும் என ஓராண்டுக்கு முன்பு அறிவித்து தேவையான நிதி ஆதாரத்தை ஒதுக்கீடு செய்தேன்.

இப்போது கால்நடை மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்து உள்ளேன். நான் சொல்வதைதான் செய்து உள்ளேன் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி, உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கால் நடை மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கும் கல்லூரி சோ்க்கை ஆணை பெற்று உள்ளனா்.

தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்காக காவிரி ஆற்றில் இருந்து 10 எம்.எல்.டி. குடிநீா் ரூ. 260 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வேதனை, துயரம் தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

விழாவில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா, திட்டக் குழுத் துணைத் தலைவா் சி.பொன்னையன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், சின்னத்தம்பி, மருதமுத்து, சித்ரா மற்றும் கால்நடை துறை முதன்மைச் செயலா் கோபால், இயக்குநா் ஞானசேகரன், மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் முதல்வா், தலைவாசலில் ரூ. 125 கோடியில் 58 முடிவுற்ற திட்ட பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.181 கோடியில் 58 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com