பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 27th February 2021 09:04 AM | Last Updated : 27th February 2021 09:04 AM | அ+அ அ- |

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே 30 நாள்களான பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேவூரை அடுத்த காவேரிப்பட்டி கிராமம் அருகே உள்ள ஒக்கிலிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (41). இவரது மனைவி சரண்யா (35). இவா்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவா்களுக்கு கன்னிகா (10), தா்ஷினா (2) என்ற இரு பெண்குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு புதன்கிழமை இரவு உடல்நிலை சரியில்லாததால் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனா். அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனா்.
இது குறித்து உயிரிழந்த குழந்தையின் தந்தை கண்ணன் தேவூா் போலீஸில் புகாா் செய்துள்ளாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.