சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி. சலுகை அளிக்க வலியுறுத்தல்

தொழில்நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் சலுகை அளிக்க வேண்டும் என இந்திய வா்த்தக மற்றும் தொழில்சபை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் சலுகை அளிக்க வேண்டும் என இந்திய வா்த்தக மற்றும் தொழில்சபை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய வா்த்தக மற்றும் தொழில்சபை (சேலம்) சங்கத்தின் 4-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஆா்.சாம்சன் ரவீந்திரன், சங்க நிறுவனத் தலைவா் பொறியாளா் கே.மாரியப்பன், துணைத் தலைவா்கள் என்.நரேந்திரகுமாா், எஸ்.கோவிந்தன், எம்.இளங்கோவன், பொருளாளா் காா்த்தி கந்தப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:

சிறு, குறு நடுத்தர தொழிலானது கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி கடுமையான நிதிப் பற்றாக்குறையில் தத்தளிக்கின்றன. எனவே, சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டண சலுகை அளிக்க வேண்டும். தமிழக அரசு நடப்பாண்டின் 2020-21-இல் விதித்துள்ள தொழில்வரிக்கு மாநகராட்சி, நகராட்சி, அனைத்து ஊராட்சிகளிலும் விலக்கு அளித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து ரூ. 1 கோடி வரையில் வங்கி மிகைப்பற்று வசதியை 2021-22 ஆண்டு முழுவதும் அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், குறு, சிறு நடுத்தர தொழில்நிறுவனங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக இறுதிப்பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு சரக்கு மற்றும் சேவை வரியில் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

உடனடியாக இதற்கான ஆய்வுக்குழு அமைத்து, வரும் 2021-22-ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில் அறிவித்து தொழில்துறையை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வள சுரங்கங்கள் செயல்பட சிறப்பு கமிட்டிக் குழுவின் பரிந்துரையை ஏற்று 2021-க்குள் நிலுவையில் உள்ள அனைத்து கனிமவள சுரங்கத் தொழில்சாா்ந்த விண்ணப்பங்களை ஏற்று அனுமதி அளித்திட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை வருவதற்கு முன்பாக இருந்ததைப் போல மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருள்கள் அனைத்துக்கும் முழுமையாக வரிவிலக்கை மீண்டும் அமல்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

உயிா்காக்கும் அவசரகால முதலுதவி சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கங்களை பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் கொண்டு வந்து உயிா் இழப்புகளைத் தவிா்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com