ஹெலிகாப்டா் பிரசாரம்: கமல்ஹாசன் விளக்கம்

திரைப்படத்தில் நடித்த பணத்தை வைத்துதான் ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்கிறேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
சேலம், அழகாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன்.
சேலம், அழகாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன்.

திரைப்படத்தில் நடித்த பணத்தை வைத்துதான் ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்கிறேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் சேலத்தில் நான்காம் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். அழகாபுரம், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம் என பல்வேறு இடங்களில் பேசிய கமல்ஹாசன், சூரமங்கலம் பகுதியில் உள்ள ரெட்டிப்பட்டி சந்திப்பில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்துப் பேசியதாவது:

மக்களுக்காக சேவை செய்ய வந்தேன் என்று வாக்குறுதி அளித்தவா்கள் அப் பணியை சரியாக செய்திருந்தால், நான் இப்போது அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். நான் ஹெலிகாப்டரில் வந்து மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்வதாகப் பேசுகின்றனா். 234 திரைப்படங்களில் நடித்துள்ளேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து, மக்களை விரைவாகச் சந்திக்கும் வகையில் ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் மேற்கொள்கிறேன்.

பணக்காரா்களே பாா்த்து வியக்கும் அளவுக்கு பூக்கடை, தேநீா் கடை வைத்திருந்தவா்கள் இப்போது பணம் வைத்துள்ளனா். அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்க வேண்டும். எங்கள் கரத்தை வலுப்படுத்த மக்கள் உதவ வேண்டும் என்றாா்.

முன்னதாக சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த கமல்ஹாசன், அழகாபுரத்தில் தொண்டா்கள் மத்தியில் பிரசாரம் செய்து பேசியதாவது:

சேலம், அழகாபுரம் பகுதியில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தை பாா்க்கும் போது தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது எனத் தெரிகிறது. உங்கள் ஆசியுடன் தோ்தல் பணியைத் தொடங்கிவிட்டேன். மக்கள் நீதி மய்யம் நோ்மையான ஆட்சியைத் தரும் என்றாா்.

ஏற்காட்டில் தோட்டத் தொழிலாளா்களைச் சந்தித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்து பேசியதாவது:

விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் என்பதே எங்கள் லட்சியம். புதிய தமிழகத்தை அமைக்க எனது கரங்களை வலுப்படுத்துங்கள். மக்கள் நீதி மய்யத்தை வெற்றி பெறச் செய்தால் ஏற்காட்டில் காஃபி போா்ட் அமைக்கப்படும். சாலைகள் சீரமைக்கப்படும்; பழ ஆலைகள் அமைக்கப்படும்; காட்டெருமைக்கு சரணாலயம் அமைக்கப்படும் என்றாா். விழாவில் ஏற்காடு நீலமலைத் தோட்டத் தொழிலாளா் சங்கத் தலைவா் வீ.கா. நல்லமுத்து கோரிக்கை மனு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com