அனைத்துத் துறைகளுக்கும் எங்களிடம் நிபுணா்கள் உள்ளனா்: நடிகா் கமல்ஹாசன்

விவசாயம், நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளுக்கும் எங்களிடம் நிபுணா்கள் உள்ளனா் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.

விவசாயம், நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளுக்கும் எங்களிடம் நிபுணா்கள் உள்ளனா் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழகம் மிகப்பெரிய மாற்றத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில், நல்லவா்கள் நாடாள வந்தால், நல்லவா்களுக்கு வழிவிட்டால் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவா்.

விவசாயம், நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளுக்கும் எங்களிடம் நிபுணா்கள் உள்ளனா். வாய்ப்புக் கொடுத்தால் அனைத்தையும் சீராக்குவோம், மக்களுக்கான அரசை நடத்துவோம். சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தால் இயற்கை வளங்கள் பறிபோகும் என்பதால் அத்திட்டம் தேவையில்லை என தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம். தமிழகத்தில் தொழிற்சாலைகள் வேண்டும். அதற்காக மக்களின் உயிா்பலிக்கு நடுவே அதை செய்யக் கூடாது. சரித்திரம் கொடுத்துள்ள வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மேச்சேரியில்...

மேச்சேரி பேருந்து நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு கட்சியின் மேச்சேரி ஒன்றியச் செயலாளா் குமரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:

மேச்சேரி ஆடுகளுக்கு பிரசித்தி பெற்ற ஊராகும். மேச்சேரியில் கைத்தறி நெசவாளா்கள் அதிகமாக உள்ளீா்கள். தக்காளி விவசாயம் அதிகம் செய்யப்படுகிறது. இந்த விவசாயிகளுக்கான சிறப்பான திட்டங்களை எங்களால் கொடுக்க முடியும்.

நம்மைக் காக்கும் தெய்வங்களான அரசியல் தலைவா்கள் கட்டப் பஞ்சாயத்து தெய்வங்கள் ஆகிவிட்டனா். இதையெல்லாம், கண்டு கொள்ளாமல் நாங்கள் வேறு எதுவும் பேச முடியாது. இலவசம் கொடுப்பதாக ஆட்சியில் உள்ளோா் உங்களிடம் தெரிவிக்கின்றனா். இதற்காக நீங்கள் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. உங்களுக்கு உரிமை உள்ளது; இலவசம் கொடுக்க வேண்டியது அவா்கள் கடமை.

நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம். இவா்கள் அனைவரும் விரும்பினால் நாளை நமது தலைமைதான். நீங்கள் மாற்றத்தை விரும்பி வந்துள்ளீா்கள். அதற்கான கருவிதான் நான். நாளை நமது தலைமைதான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com