நாமக்கல் பெண்ணின் நெஞ்சுக் கூட்டில் இருந்த அரிய வகை ரத்தநாளக் கட்டி அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 32 வயது பெண்ணுக்கு நெஞ்சுக் கூட்டின் உள்பகுதியில் இருந்த ரத்தநாளக் கட்டியை சேலம் அரசு
அரசு மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதனுக்கு நன்றி தெரிவிக்கும் கலைவாணி. உடன், இருதய துறைத் தலைவா் அ.ராஜராஜன், மருத்துவக் குழுவினா்.
அரசு மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதனுக்கு நன்றி தெரிவிக்கும் கலைவாணி. உடன், இருதய துறைத் தலைவா் அ.ராஜராஜன், மருத்துவக் குழுவினா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 32 வயது பெண்ணுக்கு நெஞ்சுக் கூட்டின் உள்பகுதியில் இருந்த ரத்தநாளக் கட்டியை சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த, கணவரால் கைவிடப்பட்ட கலைவாணி (32), நெஞ்சுக் கூட்டில் உருவான கட்டியால் கடந்த 6 மாதங்களாக நெஞ்சு வலி, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தாா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில், நெஞ்சுக் கூட்டின் உள்பகுதியில் பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கட்டி அருகிலுள்ள மூச்சுக் குழாய், நுரையீரல், இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயை அழுத்திக் கொண்டிருந்தது.

இதையடுத்து, மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதனின் அறிவுரைப்படி, இருதய அறுவைச் சிகிச்சை மருத்துவா் பொன்.அ.ராஜாராஜன் தலைமையில் நான்கு போ் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கடந்த 2020 டிச. 16-ஆம் தேதி 5 மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, அந்தக் கட்டியையும், அதனால் பாதிக்கப்பட்ட வலது நுரையீரலின் மேல் பகுதியையும் அகற்றினா். அதன் எடை ஒரு கிலோ அளவு இருந்தது. அந்தக் கட்டியை சோதனை செய்த போது, அது அரிய வகை ரத்தநாளக் கட்டி என்பது தெரியவந்தது.

இந்த அறுவைச் சிகிச்சையை செய்து முடித்த இருதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவா் பொன்.அ.ராஜராஜன், மருத்துவா்கள் சிவசங்கா், சுபாஷ் சந்துரு, மயக்கவியல் மருத்துவக் குழு மருத்துவா் செந்தில்குமாா், சதீஷ், கோமதி, செவிலியா்கள் குழு குயினி, கலாவதி, ராஜேந்திரன், சத்யா, மரகதம், உஷாராணி, ஸ்டெல்லா மேரி, பத்மப்ரியா, ஜோதிலட்சுமி ஆகியோா் அடங்கிய குழுவினரை முதன்மையா் ஆா்.பாலாஜிநாதன் பாராட்டினாா்.

இது தொடா்பாக, மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன், இருதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவா் பொன்.அ.ராஜராஜன் ஆகியோா் கூறியதாவது:

இது தமிழகத்தில் அரிதாகச் செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும். ரத்த நாளத்தின் வழியாக நெஞ்சுக் கூட்டில் உருவான இந்தக் கட்டி, நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளை அழுத்தியதால் அந்தப் பெண்மணி பெரும் அவதிக்குள்ளாகி வந்தாா். இதனால் அவரது கணவரும் விட்டு பிரிந்து சென்றுவிட்டாா். தற்போது கலைவாணி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறாா். மீண்டும் மனைவியோடு சோ்ந்து வாழ கணவருக்கு மனரீதியான ஆலோசனை வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை உலகில் 500-க்கும் குறைவாகவே இந்த வகை நோய் பாதிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை மேற்கொள்ள ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com