சங்ககிரி வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா தொடக்கம்
By DIN | Published On : 07th January 2021 06:56 AM | Last Updated : 07th January 2021 06:56 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேய சுவாமி.
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
வஸந்தவல்லி உடனமா் வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சநேயா் சுவாமி உள்ளாா். அனுமன் ஜயந்தி தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனா். இதனையடுத்து ஜனவரி 7ஆம் தேதி இரவு வெண்ணெய்க் காப்பு அலங்காரம், 8ஆம் தேதி இரவு வெற்றிலை அலங்காரம், 9ஆம் தேதி இரவு வெட்டிவோ் அலங்காரம், 10ஆம் தேதி இரவு வடைமாலை சேவை நடைபெற உள்ளன. சுவாமிக்கு தினசரி மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி முதல்முறையாக பூஜை நடைபெறும் நாள்கள் 9 லிருந்து 5 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என இந்து சமய அறநிலையத் துறையினா் தெரிவித்துள்ளனா்.