மறைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சொந்த நிலத்தில் நினைவகம்

மறைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு, சொந்த நிலத்தில் கல்லறை அமைத்ததோடு, நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு நடத்தி ஆசிரியர் குடும்பத்தினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 
ஜல்லிக்கட்டு காளையை அடக்கம் செய்து அமைக்கப்பட்டுள்ள நினைவகம்.
ஜல்லிக்கட்டு காளையை அடக்கம் செய்து அமைக்கப்பட்டுள்ள நினைவகம்.

தமிழகம் முழுவதும் பங்கேற்ற வாடிவாசல் தோறும் பிடிபடாமல் வெற்றி வாகை சூடி பெருமைத் தேடித்தந்த ஜல்லிக்கட்டு காளைக்கு, சொந்த நிலத்தில் கல்லறை அமைத்ததோடு, நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு நடத்தி ஆசிரியர் குடும்பத்தினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் வீட்டு விலங்குகளான நாய், பூனை மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், மன  வருத்தத்தோடு அப்புறப்படுத்தி விட்டு, அன்றாடப் பணிகளை தொடர்வது வாடிக்கை. ஆனால், ஒரு சாரர் தங்களோடு வாழ்ந்து மறைந்த கால்நடைகளுக்கு பரிவுகாட்டி, வீட்டில் ஒரு அங்கத்தினர் மறைந்தை போல உணர்ந்து சடங்கு சம்பிரதாயப்படி அடக்கம் செய்து மனித நேயத்தை வெளிப்படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றனர். 

ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவாக வைக்கப்பட்ட பதாகைகள்.

இந்த வரிசையில் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியரின் குடும்பத்தினர் இடம்பிடித்துள்ளனர். வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). பழனியாபுரம் காலணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாது குடும்பத்தினர் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை, ஆசிரியர் பெரியசாமியின் மகனான பட்டதாரி இளைஞர் அருண்குமார் 22 வளர்த்து வந்துள்ளார்.

மிக கம்பீரமாக காட்சியளித்த இக்காளைக்கு சிங்கமென பெயரிட்டு, உலக புகழ்பெற்ற அலங்காநல்லுார் உள்பட தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரபல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர். பங்கேற்ற வாடிவாசல் தோறும் எந்த வீரரின் கைகளிலும் அடங்காமல் இக்காளை வெற்றிவாகை சூடி பரிசுகளை குவித்து வந்தது. ஆனால், வளர்த்து வரும் தலைமையாசிரியர் குடும்பத்தினரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு சாதுவாக நடந்து கொண்டது. இதனால் இக்காளையை இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மனதிலும் இடம் பிடித்தது.

இந்நிலையில், கடந்தாண்டு எதிர்பாராதவிதமாக இக்காளைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உள்ளூர் கால்நடை மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தது மட்டுமின்றி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி, 2020 ஜனவரி 20-ல் பரிதாபமாக உயிரிழந்து போனது. குடும்பத்தில் ஒரு உறுப்பினரை போல கருதி மிகுந்த பரிவுகாட்டி வளர்த்த ஜல்லிக்கட்டு காளை திடீரென இறந்து போனால், ஆசிரியரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். காளையின் உடலை அப்புறப்படுத்த மனமில்லாமல், சிங்கிபுரம் வேலவன் நகரிலுள்ள இவர்களது சொந்த நிலத்தில் காளையின் உடலை சடங்கு சம்பிரதாயங்களுடன் அடக்கம் செய்தனர். 

ஜல்லிக்கட்டு காளை இறந்து ஓராண்டு நிறைவு பெற்றதால், குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பதைப் போல, காளையின் நினைவிடத்தை துாய்மைப்படுத்தி பூக்களை துாவி அலங்கரித்து, குடும்பத்தினர் ஒன்றுகூடி நினைவு தினம் அனுசரித்தனர். இதுமட்டுமின்றி நினைவஞ்சலி பாதகைகளை கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைத்து, மனித நேயத்தை வெளிப்படுத்தினர். ஜல்லிக்கட்டு காளைக்கு பரிவுகாட்டிய ஆசிரியரின் குடும்பத்தினர், இக்காளைக்கு நினைவகம் அமைத்ததோடு, நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு நடத்திய நிகழ்வு கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com