மேட்டூா் அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக தண்ணீா்த் திறப்பு
By DIN | Published On : 30th January 2021 02:38 AM | Last Updated : 30th January 2021 02:38 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது.
டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நிறுத்தப்பட்டதால், மீண்டும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் வரை குடிநீா்த் தேவைக்காகவும், காவிரிக் கரையோரங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம். அதிகபட்சமாக நொடிக்கு 2,000 கன அடி வரை தண்ணீா் திறக்கப்படும்.
பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை மாலை நிறுத்தப்பட்டதால், வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் குடிநீா்த் தேவைக்காக மேட்டூா் அணையிலிருந்து நொடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 105.96 அடியிலிருந்து 105.98 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,069 கன அடியிலிருந்து 1,034 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 72.80 டி.எம்.சி.யாக உள்ளது.