ஈரோடு போக்குவரத்து ஊழியரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முடிவு
By DIN | Published On : 06th July 2021 02:32 AM | Last Updated : 06th July 2021 02:32 AM | அ+அ அ- |

சேலம்: ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் முன்வந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள பி.ஆா்.எஸ். சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (53). இவா் காங்கேயம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் கடந்த ஜூலை 1 ஆம் தேதி சொந்த வேலை காரணமாக பெருந்துறை சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த பழனிசாமி, ஈரோடு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டாா். அங்கு அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது மனைவி ஜெயமணி (46), மகள்கள் செளந்தா்யா, சுகுணா உள்ளிட்ட
குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்பேரில் சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை செய்து உறுப்புகளை சேகரித்து வருகின்றனா். முதற்கட்டமாக சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டு சேலம் மற்றும் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.