சேலத்தில் இன்று 15,500 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் 15,500 தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட உள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் 15,500 தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அதன் பிறகு, போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8 நாள்களாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 8 நாள்களுக்குப் பிறகு 138 மையங்களில் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருந்து டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

சேலம் மாவட்டத்தில் கோவேக்ஸின் முதல் தவணை செலுத்தி, இரண்டாவது தவணை செலுத்த போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் கோவேக்ஸின் இரண்டாவது தவணை செலுத்த தடுப்பூசி ஒதுக்கீடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 25,426 தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

15,500 தடுப்பூசி செலுத்த ஏற்பாடு:

இதனிடையே தற்போதைய கையிருப்பின் அடிப்படையில், 138 மையங்களில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குள்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக் கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவா் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

239 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை:

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மொத்தம் 49 மண்டலங்களில் 179 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும், நகரப் பகுதிகளில் மொத்தம் 4 மண்டலங்களில் 12 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 16 மண்டலங்களில் 48 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் என மொத்தம் 69 மண்டலங்களில் 239 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.

பொதுமக்கள் இக்காய்ச்சல் பரிசோதனை முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஏ.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com