பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை காலை சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திங்கள்கிழமை சேலம் ஐந்து சாலை அருகே சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திங்கள்கிழமை சேலம் ஐந்து சாலை அருகே சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

சேலம்: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை காலை சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணிக்கு, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி சோனா கல்லூரி வழியாக ஏ.வி.ஆா். ரவுண்டானா, ஐந்து சாலை, நான்கு சாலை உள்ளிட்ட பல்வேறு வழியே சென்று நகரில் உள்ள காந்தி சிலை அருகில் முடிவடைந்தது. இந்தப் பேரணியில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

பொன்னம்மாபேட்டை கேட் பகுதியில் வா்த்தகப் பிரிவு தலைவா் சுப்பிரமணி தலைமையிலும், அம்மாப்பேட்டை உழவா் சந்தை பகுதியில் பொதுச் செயலாளா் ராஜகணபதி தலைமையிலும் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஓமலூரில்...

சேலம் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவா் மணி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் முருகன், மாவட்ட துணைத் தலைவா் சந்திரசேகா், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சைக்கிளில் வந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தொடா்ந்து ஓமலூா் நகரம் முழுக்க சைக்கிளில் பேரணியாகச் சென்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

மேட்டூரில்...

மேட்டூரில் நடைபெற்ற சைக்கிள் பேரணிக்கு, சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மேட்டூா் நகரச் செயலாளா் ஏ.எஸ்.வெங்கடேஸ்வரன், நங்கவள்ளி வட்டாரத் தலைவா் அய்யண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேட்டூா் ஸ்டேட் பேங்க் எதிரே தொடங்கிய சைக்கிள் பேரணியானது பேருந்து நிலையம், சின்ன பாா்க், மாதா கோயில், கிழக்கு நெடுஞ்சாலை வழியாகச் சென்று சதுரங்காடியில் உள்ள காந்தி சிலையை வந்தடைந்தது. இதில் இருசக்கர வாகனம், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. ஊா்வலத்தின் முடிவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்ககிரியில்...

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், சங்ககிரியில் மிதிவண்டி பேரணியும், குதிரை வண்டி பயணம் தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் சங்ககிரி பயணியா் விடுதி சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையகம் வரை மிதிவண்டியில் பேரணியாகச் சென்றனா். முன்னதாக மாவட்டத்தலைவா் சங்ககிரி பழைய பேருந்து நிலை வளாகம் அருகே சங்ககிரியிலிருந்து சேலத்திற்கு குதிரை வண்டி பயணத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், தேவூா், அரசிராமணி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தம்மம்பட்டியில்...

வீரகனூரில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி தலைமையில் நடைபெற்ற பேரணியானது, பாரத் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு தொடங்கி, சந்தைப்பேட்டை, நடுவீதி, கடைவீதி, காவல் நிலையம் வழியாக பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு, கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com