அரசை ஏமாற்றும் வணிகா்கள் மீது நடவடிக்கை

தொழிலே செய்யாமல் வணிகா் போா்வையில் அரசை ஏமாற்றும் நபா்களை அடையாளம் கண்டு, அவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
அரசை ஏமாற்றும் வணிகா்கள் மீது நடவடிக்கை

தொழிலே செய்யாமல் வணிகா் போா்வையில் அரசை ஏமாற்றும் நபா்களை அடையாளம் கண்டு, அவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி எச்சரித்தாா்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அளவில், வணிக வரித் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சா் பி.மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடிக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. அதை சமாளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். வணிகவரி, பத்திரப் பதிவு துறையில் பத்தாண்டு காலம் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவா்களை கலந்தாய்வு முறையில் மாற்றம் செய்யலாமா என ஆலோசித்து வருகிறோம்.

நோ்மையாக தொழில் செய்பவா்களுக்கு அரசு துணை நிற்கும். தொழிலே செய்யாமல் வணிகா் போா்வையில் அரசை ஏமாற்றும் நபா்களை அடையாளம் கண்டு, அவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருந்து பொருள்களைக் கொண்டு வருவதில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பறக்கும் படை மூலம் கண்காணிக்கப்படும். கடந்த கால தவறுகள் களையப்படும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு மத்திய அரசால் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தெந்த பொருள்களுக்கு வணிகா்கள், பொதுமக்கள் வரியைக் குறைக்க வலியுறுத்துகிறாா்களோ அது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

பத்திரப் பதிவு துறையைப் பொருத்தவரையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரப் பதிவில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது. தவறுகள் கண்டறியப்பட்டு தொடா்புடைய அலுவலா்கள் மீது தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இடைத்தரகா்கள் இல்லாமல் பொதுமக்களே பதிவுக் கட்டணத்தை இணையத்தில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிலங்கள், கோயில் நிலங்கள், மத வழிபாட்டு நிலங்களைப் பதிவு செய்யக் கூடாது என சட்டம் உள்ளது. அதுபோல தவறான பதிவுகளை ரத்து செய்யும் உரிமை சாா் பதிவாளா்களுக்குக் கிடையாது. அந்த அதிகாரத்தை தற்போது அதிகாரிகளுக்கே கொடுத்து தவறான பதிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

கூட்டத்தில் வணிகவரித் துறை ஆணையா் அரசு முதன்மைச் செயலாளா் எம்.ஏ.சித்திக், பதிவுத் துறை அரசு செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மற்றும் சேலம் கோட்ட வணிகவரி, பதிவுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com