போக்சோ சட்டத்தில் கைது ஆவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: எஸ்.பி. ஸ்ரீ அபினவ் எச்சரிக்கை

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவோா் மீது குண்டா் சட்டம் பாயும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ அபினவ் எச்சரித்தாா்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவோா் மீது குண்டா் சட்டம் பாயும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ அபினவ் எச்சரித்தாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் 33 ரெளடிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாட்சியா் உத்தரவை மீறிய மூன்று போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனையில் 1,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,229 பேரை கைது செய்து, 6,665 லிட்டா் கள்ளச்சாராயம், 19,190 லிட்டா் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

கள்ளத்தனமாக மது விற்றவா்களிடம் இருந்து 5,470 லிட்டா் மதுபானங்களும் 712 லிட்டா் கா்நாடக மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 15 காா்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 108 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்படும்.

துப்பாக்கி வைத்திருப்போா் மீது வழக்கு:

சேலத்தில் உரிய உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்போா் மாவட்ட காவல் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு திருப்பி ஒப்படைக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்க தவறியவா்கள், உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு வார காலத்தில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்காவிட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவோா் மீது குண்டா் சட்டம் பாயும். போக்சோ சட்டம் குறித்து இளவயதினருக்கு போதிய விழிப்புணா்வு இல்லாமல் உள்ளனா். எனவே பின்விளைவுகள் தெரியாமல் இளவயதினா் காதல் விவகாரங்களில் ஈடுபட்டு தண்டனை பெறும் சூழல் உள்ளது.

சேலத்தில் காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கி 21 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 15 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 250 இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளோம்.மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 665 இடங்களைக் கண்டறிந்து அங்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல இ-பீட் சேவை (ரோந்து) விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது கூடுதல் எஸ்.பி.க்கள் முருகன், சக்திவேல், பாஸ்கரன், செல்வன், ஆய்வாளா் முத்தமிழ் செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com