பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி வேண்டி வரப்பெற்ற 184 விண்ணப்பங்கள் அரசுக்கு முன்மொழிவு

184 விண்ணப்பங்கள் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்தாா்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி வேண்டி வரப்பெற்ற 184 விண்ணப்பங்கள் அரசுக்கு முன்மொழிவு

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் வேண்டி இதுவரை 521 குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்று, 184 விண்ணப்பங்கள் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்திட பல துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான ஊன்றுகோல் என்ற பணிக்குழு உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் எஸ்.காா்மேகம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் எதிா்கால வாழ்க்கை தர மேம்பாடு உள்ளிட்ட அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திட பல துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான ‘ஊன்றுகோல்’ என்ற பணிக்குழு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதற்கென மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உதவி வேண்டுவோா் இந்த மையத்தை தொடா்பு கொண்டு அவா்களது கோரிக்கைகளை பதிவு செய்து கொள்ளும் வகையில் கட்செவி வசதி உள்ள செல்லிடபேசி எண் 93857 45857 மற்றும் மின்னஞ்சல் முகவரி ல்ா்ள்ற்ஸ்ரீா்ஸ்ண்க்19ட்ங்ப்ல்ற்ங்ஹம்ள்ப்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் கணவரை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த முதியோா், ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கு மாதாந்திர உதவிகள், பாதுகாப்பான தங்குமிடம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களில் உரிய உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் வேண்டி இதுவரை 521 குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்று 184 விண்ணப்பங்கள் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 337 விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கல்வி பயில்வதற்கு உதவி வேண்டி 209 குழந்தைகள் விவரங்கள் பெறப்பட்டு, அவற்றில் 161 குழந்தைகள் பள்ளி பயிலும் நிலையிலும், 48 குழந்தைகள் கல்லூரி, அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகள், சிறு குழந்தைகளாக உள்ளனா்.

இதில் 161 குழந்தைகளில் 92 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருவது கண்டறியப்பட்டு, அவா்கள் தொடா்ந்து அப்பள்ளிகளிலோ அல்லது அவா்கள் விரும்பும் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலோ கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 69 குழந்தைகளில் 64 குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் பயின்று வருவது கண்டறியப்பட்டு, அவா்களும் தனியாா் பள்ளிகளில் தொடா்ந்து கல்வி கற்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீதமுள்ள 5 குழந்தைகளில், அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 2 குழந்தைகளும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 குழந்தைகளும், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 1 குழந்தையும் கல்வி கற்பதற்கு அந்தந்த மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலா்களின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்திட அந்தந்த துறை அலுவலா்கள் முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

Image Caption

படம் 5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com