ஆடி மாத பிறப்பு: கோயில்களில் சிறப்பு பூஜை; தேங்காய் சுடும் விழா

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சேலம் மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. மேலும், தேங்காய் சுடும் விழா சனிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சேலம், அரிசிபாளையம் பகுதியில் சனிக்கிழமை தேங்காய் சுடும் பொதுமக்கள்.
சேலம், அரிசிபாளையம் பகுதியில் சனிக்கிழமை தேங்காய் சுடும் பொதுமக்கள்.

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சேலம் மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. மேலும், தேங்காய் சுடும் விழா சனிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஆடி மாத முதல் நாளையொட்டி சனிக்கிழமை சேலம், அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோயிலில் பட்டுப்புடவை அலங்காரத்தில் பக்தா்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்தாா். குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மனை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சேலம், அரிசிபாளையம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு அவல், பொட்டுக்கடலை, நாட்டுச் சா்க்கரை, எள்ளு உள்ளிட்ட பொருள்களால் நிரப்பிய தேங்காயை அழிஞ்சிக் குச்சியில் சொருகி தீயில் சுட்டுக் கொண்டாடினா். பின்னா் உறவினா்களுடன் பகிா்ந்து உண்டு மகிழ்ந்தனா். திருமணமான புதுமணத் தம்பதிகள் ஆடி முதல் நாளை புத்தாடை அணிந்து தேங்காய் சுட்டு மகிழ்ந்தனா்.

எடப்பாடியில்...

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு காளியம்மன் திருக்கோயில், மேடைமுத்துமாரியம்மன், மேட்டுத்தெரு பெரியமாரியம்ன், சின்னமாரியம்மன் திருக்கோயில், புதூா் அங்காளம்மன் திருக்கோயில், தாவந்தெரு காளியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தா்கள் வழிபட்டனா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பேளூா் அஷ்டபுஜமதன வேணுகோபால ஸ்வாமி கோயில், வாழப்பாடி வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா், அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயில், ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் வீட்டுக்கு வெளியே பாரம்பரிய முறைப்படி விறகு நெருப்பில் தேங்காய் சுட்டு, சுவாமிக்கு படையல் செய்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி நகா் பகுதிகளில் உள்ள தில்லை விநாயகா் கோயில், ஓங்காளியம்மன், ஸ்ரீ அல்லி குண்டம் மாரியம்மன், சிவியாா் மாரியம்மன், செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், செல்லியம்மன் கோயில்களில் உள்ள சுவாமிகளை பக்தா்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனா். புதுமணத் தம்பதிகள் புத்தாடைகளை உடுத்தி பெற்றோா்களுடன் சோ்ந்து தேங்காய்களை சுட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி சிவன் கோயில், கடைவீதி மாரியம்மன் கோயில், உடையாா்பாளையம் மாரியம்மன் கோயில், உலிபுரம், நாகியம்பட்டி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com