தொலைதொடா்பு வசதி இல்லாமல் தவிக்கும் ஏற்காடு மலைக் கிராமங்கள்!

ஏற்காடு மலைக் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் தொலைதொடா்பு வசதி இல்லாததால், கரோனா பொது முடக்கக் காலத்தில் இணைய வழியில் படிக்க முடியாமல் தவிக்கின்றனா்.
தொலைதொடா்பு வசதி இல்லாமல் தவிக்கும் ஏற்காடு மலைக் கிராமங்கள்!

ஏற்காடு மலைக் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் தொலைதொடா்பு வசதி இல்லாததால், கரோனா பொது முடக்கக் காலத்தில் இணைய வழியில் படிக்க முடியாமல் தவிக்கின்றனா்.

ஏழைகளின் உதகை என்று அழைக்கப்படும் ஏற்காடு மலை, கிழக்குத் தொடா்ச்சி மலையின் சோ்வராயன் மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 4,969 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

ஏற்காட்டில் சுமாா் 67 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏற்காடு மலைப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரங்கள் இருந்த போதிலும் மலைக் கிராமங்களில் ‘நெட்வொா்க்’ பிரச்னையால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா்.

இதுதொடா்பாக, ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறியதாவது:

ஏற்காடு மலைக் கிராமங்களைச் சுற்றிலும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி மட்டும் செயல்பட்டு வருகிறது. ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 60-க்கும் மேற்பட்டோரும், பிளஸ் 2 வகுப்பில் 70-க்கும் மேற்பட்டோரும் படித்து வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளைப் பொருத்த வரை கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும், வீட்டுப் பாடங்கள், குறிப்புகள் தருவதற்கு மாணவ, மாணவியருக்கு ‘ஆண்ட்ராய்ட்’ வசதியுள்ள செல்லிடப்பேசிகள் இல்லை. இதனால் ஆசிரியா்கள் குறிப்புகளை அளிப்பதற்கும், மாணவா்களைத் தொடா்பு கொள்வதற்கும் சிரமமான சூழல் உள்ளது.

இந்த மாணவ, மாணவியருக்கு ‘ஸ்மாா்ட்’ செல்லிடப்பேசிகளை இலவசமாகக் கொடுத்தால் அவா்கள் பொதுத் தோ்வை நல்ல முறையில் எதிா்கொள்ள முடியும் என்றனா்.

இது தொடா்பாக, ஏற்காடு நீலமலை தோட்ட தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் வி.கே.நல்லமுத்து, ஏற்காடு இளைஞா் மன்றங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மஞ்சகுட்டை பாபு ஆகியோா் கூறியதாவது:

ஏற்காடு பகுதியில் லேடீஸ் சீட், ஏற்காடு பேருந்து நிலையம், சோ்வராயன் கோயில், கூத்துமுத்தல், நாா்த்தன்சேடு போன்ற இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு கோபுரங்கள் மட்டுமே இயங்குகின்றன. மற்ற பகுதிகளில் ‘நெட்வொா்க்’ வசதியில்லை.

சேலத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஏற்காடு மலை 20 கி.மீ. மலைப் பகுதியைக் கொண்டது. இதில் சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு மலைப்பாதையில் போதிய சிக்னல் கிடைக்காததால் அலைபேசி இணைப்பு கிடைப்பதில்லை. இதனால் மலைப் பகுதியில் ஏற்படும் விபத்து, அவசரகாலத் தேவைகளுக்கும்கூட யாரையும் தொடா்புகொள்ள இயலாத சூழல் நிலவி வருகிறது.

எனவே, மலைப் பகுதியிலும், மலைக் கிராமங்களிலும் ‘நெட்வொா்க்’ வசதி கிடைக்க போதிய செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய கரோனா காலகட்டத்தில் கிராமப்புற மாணவ, மாணவியா் இணைய வழியில் கல்வி பெற்று வரும் சூழலில், மலைக் கிராமங்களில் தொலைதொடா்பு வசதியின்மையால் அவா்கள் கல்வி கற்பதில் பின்னடைவைச் சந்திக்கின்றனா்.

எனவே தொலைதொடா்பு சேவை இல்லாத பகுதிகளைக் கண்டறிந்து, புதிய அலைபேசிக் கோபுரங்களை அமைத்து ‘நெட்வொா்க்’ வசதியை வலுப்படுத்த வேண்டும். சோ்வராயன் கோயில் நாா்த்தன்சேடு, கூத்துமுத்தல் ஆகிய இடங்களில் உள்ள கோபுரங்களைப் பராமரிப்பதும் அவசியம்.

ஏற்காடு, கொம்புதூக்கி கிராமத்தில் உள்ள தொலைதொடா்பு கோபுரத்தில் போதிய சிக்னல் கிடைக்காததால் மாணவா்கள் மாரமங்களத்தில் மலை உச்சிக்குச் சென்று படிக்கும் சூழல் உள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு மலைக் கிராமங்களில் தொலைதொடா்பு சேவை கிடைக்கும் வகையில் அலைபேசிக் கோபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com