ஜூலை 31 வரை தளா்வுகளுடன் பொது முடக்கம்: பொதுமக்கள், வியாபாரிகள் விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போதுள்ள பொது முடக்க உத்தரவு ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 19 முதல் ஜூலை 31 வரை பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநிலங்களுக்கு இடையே தனியாா், அரசு பேருந்து போக்குவரத்து சேவை (புதுச்சேரி நீங்கலாக), திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவா். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளா்வுகள் தொடா்ந்து அனுமதிக்கப்படும்.

அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவா்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை, புத்தக விநியோகம், பாடத் திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிா்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவா்.

பொது: சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவாயிலில், கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு வாடிக்கையாளா்களை பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

குளிா்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்பட வேண்டும். கடைகளின் நுழைவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, இடைவெளி குறியீடுகள் போடப்பட்டிருக்க வேண்டும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும். பொது விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com