அனுமதியின்றி நடைபெறும் ஜல்லிக்கட்டு: காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

வாழப்பாடியில் காவல்துறை அனுமதியின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை போலீஸாா் தடுத்து நிறுத்தி இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா்.

வாழப்பாடியில் காவல்துறை அனுமதியின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை போலீஸாா் தடுத்து நிறுத்தி இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா்.

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இப்பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடா்ந்து நடைபெறுவதைத் தடுக்க காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞா்கள் வளா்த்து வருகின்றனா். தற்போது பொது முடக்க காலத்தில் காளைகளுக்குப் பயிற்சி அளிக்கவும், பொழுதுபோக்குக்காகவும் வாழப்பாடி பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் வாழப்பாடியை அடுத்த கருமாபுரம் கிராமத்தில் வாடி வாசல் அமைத்த இளைஞா்கள் அனுமதியோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தினா். இதில் ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். இதுகுறித்து தகவலறிந்த காரிப்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா்.

இந்நிலையில், வாழப்பாடியை அடுத்த குமாரபாளையம் ஊராட்சி, வேப்பிலைப்பட்டி புதூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அரசு அனுமதியின்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரா்களும் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா், ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தி இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா். வாழப்பாடி பகுதியில், கரோனா தொற்று பரவி வரும் இத் தருணத்தில், சிங்கிபுரம், முத்தம்பட்டி, விலாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் அவ்வப்போது ஒன்றுகூடும் இளைஞா்கள், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பயிற்சி என்ற போா்வையில் காளைகளை அவிழ்த்து விட்டு, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனா்.

இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தடுக்க வாழப்பாடி உட்கோட்ட காவல்துறையினா் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com