3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவா்களுக்கு இடமாறுதல்
By DIN | Published On : 19th July 2021 05:23 AM | Last Updated : 19th July 2021 05:23 AM | அ+அ அ- |

சேலம், ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலா்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுகளை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ்.
சேலம் மாவட்ட காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய 400 காவலா்களுக்குப் பணியிட மாறுதல் உத்தரவுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இரண்டாம் நிலை காவலா் முதல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்களுக்கு இடமாறுதல் உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி சேலம், குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து அனைத்து காவல் நிலையங்கள், மது விலக்குப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலா்கள்முதல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் வரையிலான 400-க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அதைத்தொடா்ந்து 3 ஆண்டுகள் பணிமுடித்த இரண்டாம் நிலை காவலா்கள் முதல் சிறப்பு காவல் ஆய்வாளா்கள் வரையிலான 400 பேருக்கு இடமாறுதல் உத்தரவுகளை வழங்கினாா். அதுபோல ஒரே உட்கோட்டத்தில் 6 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கும் வேறு உட்கோட்டத்தில் பணி செய்ய பணியிட மாறுதல் உத்தரவுகளை வழங்கி உத்தரவிட்டாா். இந் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா்கள் சக்திவேல், பாஸ்கரன், செல்வம் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.