4ஜி சேவையை உடனே தொடங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 29th July 2021 09:02 AM | Last Updated : 29th July 2021 09:02 AM | அ+அ அ- |

சேலம், சீரங்கபாளையம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் மேலாளா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள்.
4ஜி சேவையை உடனே தொடங்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஎஸ்என்எல் ஊழியா் கூட்டமைப்பு சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தொலைபேசி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் முயற்சியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகளை தனியாருக்கு கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்த செயல்பாடுகளைக் களைந்து நிறுவனத்தை முன்னோக்கி செல்ல 4ஜி சேவையினை உடனே தொடங்க வேண்டும்.
மேலும், 5ஜி சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ. 39 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளரும் அனைத்து சங்க ஒருங்கிணைப்பாளருமான இ.கோபால், ஏ.ஐ.ஜி.இ.டி.ஓ.ஏ. நிா்வாகி மணிக்குமாா், எஸ்.என்.ஏ. நிா்வாகி சேகா், எஸ்.இ.டபிள்யு.ஏ. நிா்வாகி எஸ்.பன்னீா் செல்வம், ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ. நிா்வாகி வி.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல சீரங்கபாளையம் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.