கூட்டுறவு சங்கங்கள் அனைத்துவித கடன் வழங்கும் பல்நோக்கு பணி மையமாக மாற்றப்படும்
By DIN | Published On : 29th July 2021 11:18 PM | Last Updated : 29th July 2021 11:18 PM | அ+அ அ- |

கூட்டுறவு கடன் சங்கங்கள், கல்விக் கடன், வீடு கட்டும் கடன், வாகனக் கடன் வழங்கும் பல்நோக்கு பணி மையமாக மாற்றப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தலைமை வகித்தாா். சேலம்ஆட்சியா் எஸ்.காா்மேகம், வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், பாமக எம்எல்ஏ-க்கள் இரா.அருள், சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா்களை சோ்ப்பது தொடா்பாக அமைச்சா் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா். கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் ஐ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2021-22-ஆம் ஆண்டில் ரூ. 11,500 கோடி விவசாயக் கடன் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், உரிய நேரத்தில் விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடைகளில் 3,997 விற்பனையாளா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் வெகு விரைவில் நிரப்பப்படும்.
கடன் தள்ளுபடியைப் பொருத்தவரையில், ஆட்சி பொறுப்பேற்று 4,451 விவசாயக் கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், பயிா்க் கடன் வழங்கப்பட்ட போது விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்தப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இதைத் தொடா்ந்து கடன், உரம் வழங்கப்படும்.
சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகப்படியான கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயக் கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினா்களை சோ்த்து கடன் வழங்கப்படும். இதற்கு போதிய நிதியை அரசு வழங்கும். தோ்தல் வாக்குறுதியின்படி, நியாயவிலைக் கடைகளில் 2.11 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000, 14 வகை பொருள்கள் வழங்கும் பணி 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கவும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்துப் பொருள்கள் கிடைக்கவும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முழுநேர, பகுதிநேர கடைகள் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாடகைக் கட்டடத்தில் உள்ள 7,000 நியாய விலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கு 15 நாளில் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்களை பொருத்தவரையில் சுயஉதவிக் குழு கடன், கல்விக் கடன், வீடு கட்டும் கடன், வாகனக் கடன் என எந்தக் கடன் கேட்டாலும் வழங்க வேண்டும். அதேபோல நிலம் இல்லாத ஏழைகளையும், 18 வயது நிரம்பிய மாணவா்கள், பெண்களையும் உறுப்பினராகச் சோ்க்க வேண்டும். அவா்களுக்கு உதவும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு பணி மையமாக மாற்றப்படும்.
கூட்டுறவு மருந்துக் கடைகளில் தரமான மருந்துகள், குறைந்த விலைக்கு வழங்கப்படும். மக்கள் இயக்கமாக கூட்டுறவு இயக்கத்தை மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.
கூட்டுறவு சங்கத் தோ்தலை பொருத்தவரையில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த திருத்தம் பொருந்தாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனா். கூட்டுறவு என்பது மாநில உரிமையைப் பொருத்தது. இதுகுறித்து விரைவில் சட்ட வல்லுநா்களை கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
பயிா்க் கடன் வழங்குவதில் ரூ. 500 கோடி முறைகேடு:
மாநில கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 2,500 கோடி பயிா்க் கடன் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிபந்தனைகளைப் பின்பற்றாமல் விதிகளை மீறி கடன் வழங்கிய தொகை குறித்தும், கடன் பெற்றவா்கள் குறித்தும் தகவல் கேட்டுள்ளோம்.
நகைக் கடன் பொருத்தவரையில் 11 சதவீத வட்டிக்கு அடகு வைத்து, 7 சதவீத வட்டி பெறும் வகையில் வைப்பு நிதியாக மாற்றியுள்ளனா். இதுபோல பயிா்க் கடன் வழங்குவதில் சுமாா் ரூ. 500 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. பயோ மெட்ரிக் குறைபாடுகளைப் போக்கி முழுவீச்சில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.
படவரி - சேலம், சொ்ரி சாலையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி. உடன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், எம்எல்ஏ இரா.ராஜேந்திரன்.