அளவுக்கு அதிகமாக பனம் பழம் விழுங்கிய யானை பலி
By DIN | Published On : 29th July 2021 09:07 AM | Last Updated : 29th July 2021 09:07 AM | அ+அ அ- |

மேட்டூா் வனப்பகுதியில் அளவுக்கு அதிகமாக பனம் பழம் விழுங்கிய யானை பரிதாபமாக உயிரிழந்தது.
மேட்டூா் வனச்சரகம், பச்சபாலமலை காப்புக் காட்டில் முத்துமாரியம்மன் கோயில் வனப்பகுதியில் நீரோடை உள்ளதால், அதிக அளவிலான யானைகள் இப்பகுதியில் தங்கியுள்ளன. இந்த வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இப்பகுதியில் திரிந்த சுமாா் 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, அதிக அளவில் பனம் பழங்களை விழுங்கியுள்ளது. இதனால் ஜீரணக் கோளாறு ஏற்பட்டு யானையின் வயிறு வீங்கியது. ஒரு வார காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இந்த யானை, திங்கள்கிழமை உயிரிழந்தது.
தகவலறிந்த சேலம் மாவட்ட வன அலுவலா் முருகன், மேட்டூா் வனச்சரகா் பிரகாஷ் மற்றும் கால்நடை மருத்துவா் வன ஊழியா்களுடன் செவ்வாய்க்கிழமை வனப் பகுதிக்குச் சென்று யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனா். அதில், யானையின் வயிற்றில் ஏராளமான பனங்கொட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆண் யானையின் இரண்டு தந்தங்களும் அகற்றப்பட்டு அடக்கம் செய்தனா்.