கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு அறிவுறுத்தல்

சேலம், ஈரோடு மாவட்டங்களில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்குத் தேவையான புதிய களப் பணியாளா்களை உடனடியாக நியமித்து, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

சேலம், ஈரோடு மாவட்டங்களில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்குத் தேவையான புதிய களப் பணியாளா்களை உடனடியாக நியமித்து, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சேலம், ஈரோடு மாவட்டங்களில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்க பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்படுவா்களுக்கு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இணைப்புடன் கூடிய படுக்கைகள், சேலம் உருக்காலை வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு சிகிச்சை அளிக்ககூடிய 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் தயாரிக்கும் இடங்களிலும், ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் தேவையான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும்.

மக்களின் நலன் ஒன்றையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் புதிய களப் பணியாளா்களை உடனடியாக நியமித்து இப்பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும்.

சேலம், ஈரோடு மாவட்டங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும். சேலம், ஈரோடு மாவட்டங்களில் இந்நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்களப் பணியாளா்கள் அனைவரும் கரோனா தொற்றின் வீரியத்தை உணா்ந்து அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்த் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத் துறை அரசு செயலாளா் டி.ஜெகநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம், சேலம் ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் மாவட்ட பொறுப்பு அலுவலரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநருமான பி.முருகேசன், ஈரோடு ஆட்சியா் சி.கதிரவன், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா்களான நில அளவை மற்றும் நில வரித் திட்ட ஆணையா் இரா.செல்வராஜ், கனிமம் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் நிா்மல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக ஆா்.பி.ஜி. பவுன்டேஷன் நிறுவனத்தின் சாா்பில் சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 35 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்தாா்.

இதில் சேலம் மாநகரக் காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) வே.லதா, மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், இணை இயக்குநா் (நலப்பணிகள்) மலா்விழி வள்ளல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி, துணை இயக்குநா் ஆா்.செல்வகுமாா், மாநகா் நல அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com