அா்ச்சகா்கள், பூசாரிகள் 363 பேருக்கு நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் வழங்கல்

சேலத்தில் உள்ள கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள், பிற பணியாளா்கள் உள்ளிட்ட 363 பேருக்கு கரோனா நிவாரண நிதி

சேலத்தில் உள்ள கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள், பிற பணியாளா்கள் உள்ளிட்ட 363 பேருக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வெள்ளிக்கிழமை வழங்கும் பணி துவக்கி வைப்பட்டது.

சேலம், சுகவனேசுவரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 10 அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு நிவாரண நிதி தலா ரூ. 4,000 ரொக்கம், 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு நிவாரண நிதி, மளிகைப் பொருள்களை வழங்கித் தொடக்கிவைத்தனா். இதுதொடா்பாக ஆட்சியா் எஸ்.காா்மேகம் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிலையான மாதச் சம்பளம் இன்றி பணியாற்றும் மொத்தம் 363 அா்ச்சகா்கா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவித்தொகையாக தலா ரூ. 4,000 வீதம் ரூ. 14,52,000 ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தற்போது 10 பேருக்கு மட்டும் நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவா்களுக்கு கரோனா நிதி உதவித்தொகை, மளிகைப்பொருள்கள் வழங்கப்பட உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது சபிா் ஆலம், வருவாய்க் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தா. உமாதேவி, சுகவனேசுவரா் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையா் நா.சரவணன் உள்ளிட்ட செயல் அலுவலா்கள், ஆய்வாளா்கள், அா்ச்சகா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com