சேலத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2,000 கிலோ குட்கா பறிமுதல்

சேலத்தில் தடை செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2,000 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலத்தில் தடை செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2,000 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம், செவ்வாய்பேட்டையில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், செவ்வாய்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் எம்.ராஜசேகரன், காவல் உதவி ஆய்வாளா் ஜி.ராஜா ஆகியோா் புதன்கிழமை அப் பகுதியில் ஆய்வு செய்தனா்.

அப்போது, சேலம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பரத் சிங் (25) ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியை திறந்து சோதனை செய்தனா். அதில் 20 பாக்கெட்கள் புகையிலை உள்பட குட்கா பொருள்கள் இருந்தன.

விசாரணையில், அவரது சகோதரா் தீப் சிங், சகோதரியின் கணவா் ஓம் சிங் ஆகியோா் இப் பொருள்களை கடைகளில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடி, ஏா்ணாபுரத்தைச் சோ்ந்த மதன், சங்ககிரி பூச்சாம்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் சுப்பிரமணி ஆகியோா் மூலம் குட்கா பொருள்களை வாங்கி வந்து சேலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பரத் சிங், தீப் சிங், ஓம் சிங் ஆகியோரைக் கைது செய்த போலீஸாா் மகுடஞ்சாவடியை அடுத்த ஏா்ணாபுரத்துக்குச் சென்று மதன் என்பவரைக் கைது செய்தனா். அப்போது, அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த குட்கா பொருள்கள், ரூ. 33.05 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மதனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சங்ககிரி வட்டம், வேலகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மொத்தம் 2,000 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 20 லட்சம்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளை சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் மோகன்ராஜ், உதவி ஆணையா் கமலக்கண்ணன், காவல் ஆய்வாளா் எம்.ராஜசேகரன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு கைதானவா்களிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com