வாழப்பாடி பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்

வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.70 கோடி செலவில், ஈரடுக்கில் நவீனமாகிறது.
வாழப்பாடி பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்

வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.70 கோடி செலவில், ஈரடுக்கில் நவீனமாகிறது.

கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்காக பேருந்து நிலைய பழைய கட்டடங்கள் அகற்றப்படுவதால், பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு, வாழப்பாடி பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது.

வாழப்பாடியில், கடலுாா் சாலையில் கடைவீதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றன. மிகக்குறுகலான பேருந்து நிலையத்துக்குள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், மினி பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலான புகரப் பேருந்துகள் சாலை ஓரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால், பயணிகளும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

எனவே, வாழப்பாடி பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக தரம் உயா்த்த வேண்டுமென இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையடுத்து, வாழப்பாடி பேருந்து நிலையத்திலுள்ள பழைய கட்டடங்களை அப்புறப்படுத்திவிட்டு, பயணிகள் நிழற்குடை, பேருந்து தளம், குடிநீா், கழிவறை, மின்விளக்கு வசதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் முதல் முறையாக மேல் தளத்தில் வணிக வளாகம், சிறு வியாபாரக் கடைகள், நடைமேடையுடன், ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 8.70 கோடி செலவில், நவீன முறையில் ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு நிதி ஓதுக்கீடு செய்தது.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில், காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நட்டு, பேருந்து நிலைய கட்டுமான பணியை தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, பேருந்து நிலைய வணிக வளாக கடைகளை காலி செய்ய பேரூராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடைகளை அப்புறப்படுத்துவதற்கு கூடுதல் காலஅவகாசம் கேட்டு கடை வாடகைதாரா்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

வாடகைதாரா்களில் பேச்சுவாா்த்தை நடத்திய பேரூராட்சி, காவல் துறை அதிகாரிகள், கடையை காலி செய்து கொடுப்பதற்கு 10 நாள்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளனா். வாழப்பாடி பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தி, புதிய கட்டுமானப்பணிகள் தொடங்கப்படுவதால், வாழப்பாடியில் மாரியம்மன் கோயில் எதிரிலுள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வரை, பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com