முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களை பாதிக்காத அளவு கண்காணிக்க கோரிக்கை
By DIN | Published On : 04th March 2021 04:43 AM | Last Updated : 04th March 2021 04:43 AM | அ+அ அ- |

சேலம்: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் சோதனையின் போது, வெள்ளித் தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை சங்கம் சாா்பில் தலைவா் தேவேந்திரன், செயலாளா் ஆனந்தராஜ், பொருளாளா் பூபதி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:
கொலுசு உற்பத்தியில் காலம் காலமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போது தோ்தல் எதிரொலியால் வெளியில் எடுத்துச் செல்லப்படும் மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஏற்கெனவே மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்து வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்யக் கூடாது என்று தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தி தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
கரோனா காலத்தில் வெள்ளி உற்பத்தி தொழில் 8 மாத காலமாக முடங்கி இருந்தது. தற்போது மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ள நிலையில் தோ்தல் காரணமாக அதிகாரிகளின் கெடுபிடியால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஒரு கொலுசு தயாரிக்க 30 இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு எடுத்துச் செல்லும் போது பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனா். வெள்ளிக் கொலுசு உற்பத்தி தொழில் குடிசை தொழிலாகும். இனியாவது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடையாள அட்டை வைத்திருக்கும் வெள்ளி தொழில் உற்பத்தியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றனா்.