டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்: லாரி உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை

டீசல் மீதான வரியைக் குறைத்து விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம்: டீசல் மீதான வரியைக் குறைத்து விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் தமிழ்ச் சங்கத்தில் மாவட்ட லாரி உரிமையாளா் சங்க 72 -ஆவது வருடாந்திர மகாசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஆா்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் சி.தனராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். இந்தக் கூட்டத்தில் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் திரளாக பங்கேற்றனா்.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 60 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகின்றன. அது மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் சுமாா் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. அதனால் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள லாரி மாா்க்கெட்டை சீரமைத்து தர வேண்டும் என்பது உள்பட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா் சங்க செயலாளரும், மாநில லாரி உரிமையாளா் சங்க பொருளாளருமான சி.தனராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டீசல் விலை வரலாறு காணாத அளவு உயா்ந்து உள்ளது .இதனால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாக இருந்தும் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பினால் கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுகிறது. எனவே டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் உடனே குறைக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்டேக் முறை கடந்த 15ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சுங்கச் சாவடிகளில் பல மணி நேரம் லாரிகள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே சுங்கச் சாவடிகளில் ஒரு டிராக்கில் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வருகிற 21-ஆம் தேதி மாநில பொதுக்குழுக் கூட்டம் வேலூரில் நடக்க உள்ளது .இதில் லாரிகள் வேலைநிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது .

இது மட்டுமல்லாமல் வருகிற 9 ஆம் தேதி பெங்களூரில் 7 மாநிலங்களைச் சோ்ந்த தென் மாநில லாரி உரிமையாளா்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம். குறிப்பாக வருகிற 15ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தோம். ஆனால் ஐந்து மாநிலங்களில் தோ்தல் அறிவிப்பு வெளியானதால் மே 2ஆம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com