மாா்ச் 15 முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்
By DIN | Published On : 12th March 2021 04:55 AM | Last Updated : 12th March 2021 04:55 AM | அ+அ அ- |

சேலம்: குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் மாா்ச் 15 ஆம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
நாடு தழுவிய குடற்புழு நீக்க வாரம் இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல்சுற்று மாா்ச் 15 முதல் 20 ஆம் தேதி வரையும், இரண்டாம் சுற்று மாா்ச் 22 முதல் 27 வரையும் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறும். இந்த முகாமில் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் குடற்புழு நீக்க வாரம் முகாமில் 20-30 வயதுடைய பெண்களுக்கும் ( கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிர) இலவசமாக அல்பெண்டசோல் மாத்திரை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும்.
மேலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் தேவைக்கேற்ப நடைபெறுகிறது. இத் திட்டத்தின் மூலம் சேலம் சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் 7,71,771 (1 முதல் 19 வயதுடைய குழந்தைகள்) மற்றும் 1,25,307 (20-30 வயதிற்குட்பட்ட பெண்கள்) பயனடைய உள்ளனா்.
ஆத்தூா் சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் 3,39,313 (1 முதல் 19 வயதுடைய குழந்தைகள்) மற்றும் 99,520 (20-30 வயதுக்குள்பட்ட பெண்கள்) பயனடைய உள்ளனா். பொது சுகாதாரத் துறை, பள்ளி கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சாா்ந்த களப் பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.