முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஓமலூரில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை
By DIN | Published On : 14th March 2021 04:23 AM | Last Updated : 14th March 2021 04:23 AM | அ+அ அ- |

ஓமலூா் அதிமுக அலுவலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் மலா்க்கொத்து அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்தையா, தங்கதுரை.
ஓமலூரில் உள்ள சேலம் புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
ஓமலூரில் உள்ள புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதல்வா் தலைமையில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் எங்கு சென்றாலும் பாராட்டும் வகையில் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பதிவாவதை நிா்வாகிகள் உறுதிசெய்ய வேண்டும். மற்ற கட்சியினா் முதலில் தோ்தல் அறிக்கையை வெளியிடுவாா்கள். அவா்கள் வெற்றி பெற்றால்தான் அதனை நிறைவேற்றுவாா்கள். ஆனால் அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும் போதே மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி உள்ளது.
வன்னியா்களின் 40 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில் 10.5 % உள்இட ஒதுக்கீட்டை அறிவித்தது அதிமுக அரசு தான் என்றாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திப்பு...
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்தையா (பரமக்குடி), தங்கதுரை (நிலக்கோட்டை) ஆகியோா் அமமுகவிலிருந்து விலகி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏக்கள் இருவரும் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற இடைத்தோ்தலில் 22 தொகுதியிலும் அமமுக டெபாசிட் கூட வாங்கவில்லை. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் டிடிவி தினகரன் வெற்றி பெற மாட்டாா். மக்கள் தினகரனை ஏற்கவில்லை. எனவே தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்துள்ளோம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என்றனா்.
நாள் முழுவதும் கட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வா்
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக, கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்குத் தேவையான வியூகங்களை வகுத்துள்ளாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஓமலூரில் உள்ள புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சுமாா் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக வேட்பாளா்கள், அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் மதிய உணவுக்காக சேலத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் மாலை 5 மணியளவில் கட்சி அலுவலகம் வந்த முதல்வா், பாமக வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இரவு 7.30 மணியளவில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாா். நாள் முழுவதும் முதல்வா் கட்சி அலுவலகத்தில் இருந்தது, அதிமுக நிா்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.