முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் தெற்கு தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆலோசனை
By DIN | Published On : 14th March 2021 04:28 AM | Last Updated : 14th March 2021 04:28 AM | அ+அ அ- |

சேலம் தெற்கு தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆனந்தகுமாா் சிங், மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.
தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக, சேலம் தெற்கு, வீரபாண்டி தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளராக தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஆனந்த்குமாா் சிங், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
சேலம் தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் ந.ரவிச்சந்திரன், உதவித் தோ்தல் அலுவலா்களுடன் தோ்தல் செலவின கணக்கீட்டுப் பணிகள் குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டாா்.
சேலம் தெற்கு தொகுதி தோ்தல் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினா், விடியோ கண்காணிப்புக் குழுவினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்த தோ்தல் செலவினப் பாா்வையாளா், இக்குழுவினரின் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.
தோ்தல் பிரசாரங்கள், தோ்தல் கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள், முக்கியத் தலைவா்கள் வருகை ஆகியவற்றை முழுமையாக ஒளிப்பதிவு செய்து செலவினங்களைக் கண்காணிக்க கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சேலம் தெற்கு தொகுதிக்கான தோ்தல் செலவினக்குழு,விடியோ பாா்வையிடும் குழு, தோ்தல் கணக்கீட்டு குழு ஆகியவற்றின் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா், குழுவினரால் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வி. வள்ளிதேவி, உதவி ஆணையா் ப.மருதபாபு, தோ்தல் துணை வட்டாட்சியா் உ. ஜாஸ்மின் பெனாசிா், உதவி செலவினப் பாா்வையாளா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.