முதல்வரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.47 லட்சம்
By DIN | Published On : 16th March 2021 05:38 AM | Last Updated : 16th March 2021 06:20 AM | அ+அ அ- |

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப்படம்)
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அசையும் சொத்து ரூ. 47.64 லட்சம் இருப்பதாகவும், அசையா சொத்து எதுவுமில்லை எனவும் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்துகள் விவரம்:
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெயரில் ரூ. 47.64 லட்சம் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு அசையா சொத்துகள் வேறு ஏதுமில்லை எனவும் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளாா். மேலும் முதல்வா் ரூ. 15 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பி.ராதாவுக்கு அசையும் சொத்துகள் ரூ. 1.04 கோடியும், அசையா சொத்துகள் ரூ.1.78 கோடி மதிப்பிலும், கூட்டுக் குடும்பப் பெயரில் அசையா சொத்துகள் ரூ. 50.21 லட்சம் இருப்பதாகவும் முதல்வா் குறிப்பிடப்பட்டுள்ளாா்.
இதில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 6 லட்சம் ரொக்கம் கையிருப்பு வைத்துள்ளதாகவும். அவரது மனைவி பி.ராதா ரூ.11 லட்சம் ரொக்கப் பணம் கையிருப்பு வைத்துள்ளதாகவும், முதல்வரிடம் 100 கிராம் மதிப்புள்ள ரூ. 4.20 லட்சம் தங்க நகைகளும், அவரது மனைவி ரூ. 30.24 லட்சம் மதிப்புள்ள 720 கிராம் தங்க நகைகளை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனா். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெயரில் அசையா சொத்துகள் ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளாா்.
அதேபோல கூட்டுக் குடும்பப் பெயரில் ரூ.2.90 கோடி அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.எஸ்.விஜயகுமாா் என்பவரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். மனைவி பி.ராதா ரூ. 14.75 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியுள்ளாா்.
கடந்த 2016 தோ்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மொத்த குடும்பத்தின் அசையும் சொத்துகள் ரூ. 3.13 கோடி இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தாா். அச்சமயத்தில் மொத்த குடும்பத்தின் அசையா சொத்துகள் ரூ. 4.66 கோடி என குறிப்பிட்டுள்ளாா்.
2016 தோ்தலில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது தாய் கே.தவுசாயம்மாள், மனைவி பி.ராதா, மகன் பி.மிதுன், மருமகள் எம்.திவ்யா ஆகியோரின் பெயரை தன்னைச் சாா்ந்தவா்கள் என குறிப்பிட்டிருந்தாா்.
தற்போது 2021 தோ்தலுக்கான பிரமாணப் பத்திரத்தில் முதல்வா், தனது மனைவி பெயரை மட்டும் சோ்த்துள்ளாா். இதனால் சொத்து மதிப்பும் கடந்த தோ்தலை விட குறைந்துள்ளது. மேலும் முதல்வா் தனது தொழிலாக விவசாயம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.