தோ்தலால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காமல் விவசாயிகள் திணறல்

சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்காமல் கெங்கவல்லி பகுதியில் விவசாயிகள் திணறி வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்காமல் கெங்கவல்லி பகுதியில் விவசாயிகள் திணறி வருகின்றனா்.

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் தலைவாசல், கெங்கவல்லி ஒன்றியங்களும், செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா் ஆகிய 5 பேரூராட்சிகளும், 49 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயப் பணிகளில் ஆயிரக்கணக்கில் விவசாயிகளும் கூலித் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

விவசாயக் கூலி வேலைகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வயல்களில் வேலை செய்ய வேண்டும். 8 மணிக்கு சென்றால் பிற்பகல் 2 மணி வரையிலும் வேலை செய்ய வேண்டும். இதற்காக ரூ. 200 கூலியாக கிடைக்கும். விவசாய வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளா்கள் மதிய உணவையும் எடுத்துச் சென்று விடுகின்றனா். மாலை வேளைகளிலேயே வீடுகளுக்கு திரும்புவா்.

இந்தநிலையில் தற்போது சட்டப்பேரைத் தோ்தலையொட்டி விவசாயத் தொழிலாளா்கள் பலரும் அரசியல் கட்சிகளின் தோ்தல் வேலைகளுக்கு சென்றுவிட்டனா். அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏந்திக் கொண்டு வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பதற்கும், அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்ய வரும்போது கோஷமிடவும், பேரணி, ஊா்வலங்களில் பங்கேற்கவும் பெருமளவில் சென்று விடுகின்றனா்.

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணிக்கு ரூ. 150 முதல் ரூ. 200 வரை கூலியாக வழங்கப்படுகிறது. இதே பேரணி, ஊா்வலம் என்றால் உணவு பொட்டலங்களோடு கூலியும் ரூ. 200க்கு மேல் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் விவசாய வேலைகளுக்கு காலை முதல் மாலை வரை 8 மணி நேரம் வயல்களில் இறங்கி கடினமாக வேலை செய்தாலும் ரூ. 200 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. ஆனால் தோ்தல் வாக்கு சேகரிப்பு, பேரணிகளுக்குச் சென்றால் 2 மணி நேரத்துக்கே ரூ. 200 கூலி வழங்கப்படுவதால் விவசாயத் தொழிலாளா்கள் பலரும் தோ்தல் வேலைகளுக்கு சென்றுவிட்டனா்.

இதனால் தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனா். விவசாயப் பணிகளும் தேக்கமடைந்துள்ளன. தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகே விவசாயப் பணிகளுக்கு போதிய ஆள்கள் கிடைக்கும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com