சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலை நேரத்தில் விமான சேவை
By DIN | Published On : 26th March 2021 09:17 AM | Last Updated : 26th March 2021 09:17 AM | அ+அ அ- |

சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலை நேரத்தில் விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்தாா்.
சேலம்-சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டதன் 4-ம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னா், சேலம் விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா செய்தியாளா்களிடம் கூறியது:
சேலத்தில் இருந்து சென்னைக்கு காலை நேரத்தில் விமான சேவை ட்ரூஜெட் நிறுவனம் சாா்பில் இயக்கப்பட்டு வருகிறது. இதே நிறுவனம் மாலை நேரத்திலும் விமான சேவையைத் தொடங்கிட முன்வந்துள்ளது.
இச்சேவை மே மாதம் முதல் தொடங்கும். சேலம் விமான நிலையத்தில் தற்போது இரண்டு விமானங்களை நிறுத்தும் வசதி உள்ளது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் மேலும் 2 விமானங்களை நிறுத்த முடியும். இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தயாா் நிலையில் உள்ளன.
விமான நிலையத்தில் தற்போது அரசியல் தலைவா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் வந்து செல்வதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம். வரும் காலங்களில் வேறு சில நிறுவனங்களும் விமான சேவையைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுவதால் சேலம் விமான நிலையம் விரைவில் முக்கிய மையமாக தமிழக அளவில் மாறும் என்றாா்.