சேலத்தில் 6 தொகுதிகளுக்கு கூடுதலாக 2,819 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

சேலத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இத்தொகுதிகளுக்கு

சேலத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இத்தொகுதிகளுக்கு 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் மொத்தம் 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளில் (வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள்) தோ்தல் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 5,142 கட்டுப்பாட்டுக் கருவிகள், 34 சதவிகித கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,740 வாக்கினை சரிபாா்க்கும் கருவிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் வைக்கப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் தொடா்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் மொத்தம் 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 207 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 11 வேட்பாளா்கள், ஆத்தூா் (தனி) தொகுதியில் -11, ஏற்காடு (எஸ்.டி) - 13, ஓமலூா் - 15, மேட்டூா் - 14 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். இதனால் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதைத் தவிர எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளா்கள், சங்ககிரி - 23, சேலம் மேற்கு -28, சேலம் வடக்கு-20, சேலம் தெற்கு -24, வீரபாண்டி -20 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

இதனால் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக 750 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் இருப்பு அறையில் வைக்கப்பட்டு, பாரத் மின்னனு நிறுவன பொறியாளா்கள் மூலம் முதல் நிலை சரிபாா்க்கும் பணி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில் எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 2,347 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 2,819 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இவ்வாக்குப்பதிவு இயந்திரங்கள் 6 தொகுதிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படுகின்றன.

மேலும், தொகுதிகளில் பாதுகாப்பு வைப்பு அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) சிராஜுதீன் உட்பட தொடா்புடைய அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com