வாக்கு எண்ணும் மையத்துக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா் சி.அ.ராமன்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளுக்கும் அம்மாப்பேட்டை ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம், அம்மாப்பேட்டை ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுப் பணித் துறையின் மின் பிரிவு, கட்டட, கட்டுமானம், பராமரிப்பு பிரிவு அலுவலா்கள், வருவாய்த் துறை, காவல் துறை, சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி, பாதுகாப்பு வசதி, வாக்குப் பெட்டிகள் இருப்பு அறைகளுக்கான பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தபால் வாக்குகள் இருப்பு வைப்பதற்கான அறைகளில் தேவையான பாதுகாப்பு வசதி, மின்சார வசதி, வாக்கு எண்ணும் இடங்களில் தேவையான தடுப்பு வேலிகள் அமைத்தல், வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் அமைத்தல், வாக்குப் பெட்டிகள் வைப்பு இருப்பு அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வருவதற்கான தனி பாதைகள் அமைத்தல், முகவா்கள் வருவதற்கு தேவையான தனி பாதைகள் அமைத்தல், குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு முடிவுற்று வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளுக்கு பாதுகாப்பாக எடுத்து வந்து வைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்களும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணிக்கையை சிறப்பாக நடத்திட வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தாா்.

ஆய்வின் போது சேலம் மாநகரப் பொறியாளா் அசோகன், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், பொதுப்பணித் துறை (கட்டடம், பராமரிப்பு) உதவி செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவிப் பொறியாளா் முருகேசன், உதவிப் பொறியாளா் (மின் பிரிவு) எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com