தம்மம்பட்டி - பெங்களூர் அரசுப் பேருந்து கீரிப்பட்டிக்குள் செல்லாததால் மக்கள் அவதி
By DIN | Published On : 29th March 2021 01:06 PM | Last Updated : 29th March 2021 01:11 PM | அ+அ அ- |

தம்மம்பட்டியிலிருந்து பெங்களூரு செல்லும் அரசுப் பேருந்து கடந்த ஒரு மாதமாக கீரிப்பட்டி ஊருக்குள் செல்லாததால், பொதுமக்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தம்மம்பட்டியிலிருந்து தினமும் இரவு 10.15 மணிக்கு பெங்களூருக்கு கடந்த 5 வருடமாக சென்று வருகின்றது. தம்மம்பட்டியிலிருந்து சேலம் செல்லும் கடைசிப்பேருந்தாகவும், பெங்களூரு, ஓசூர் செல்ல கெங்கவல்லி, தம்மம்பட்டி ,கீரிப்பட்டி, செந்தாரப்பட்டி சுற்றுவட்டார மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகின்றது.
அதேபோல் திருச்சியிலிருந்து இரவில் தம்மம்பட்டிக்கு வந்தால் இப்பேருந்து மூலம் அருகிலுள்ள கீரிப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு இப்பேருந்து பெரிதும் வசதியாகவும், இரவில் கடைசிப்பேருந்தாகவும் உள்ளது.
இப்பேருந்து தம்மம்பட்டியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள கீரிப்பட்டி, மல்லியகரை, வாழப்பாடி வழியாக செல்கிறது. அதில் தம்மம்பட்டியை அடுத்துள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு இப்பேருந்து ஊருக்குள் சென்று பயணிகளை சென்றுவந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக, இப்பேருந்து கீரிப்பட்டி ஊருக்குள் செல்லாமல், ஒரு கி.மீ.தூரத்திற்கு முன்னதாக பயணிகளை இறக்கிவிட்டு சென்று விடுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கீரிப்பட்டி பேரூராட்சி மக்கள் கூறியதாவது, பெங்களூரு பேருந்து மூலம் தம்மம்பட்டியிலிருந்து கீரிப்பட்டி வருபவர்கள் அதிகம். இப்பேருந்து கீரிப்பட்டி முக்கோணம் என்ற பேருந்து நிறுத்தத்திலேயே நிறுத்திவிட்டு, பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றுவிடுவதால், அங்கிருந்து வயதானவர்கள், ஒரு கி.மீ.தூரம் நடந்துச்சென்று ஊரை அடைய வேண்டும்.
அந்த வழியில் இரவுநேர சந்துக்கடை உள்ளதால், அந்த வழியே வயதானவர்கள், நோயாளிகள், இதய பாதிப்புள்ளவர்கள் உள்ளிட்டோர் இறங்கி நடந்துச்செல்வது மிகவும் சிரமமாக இருந்து வருகின்றது. எனவே, உரிய போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பெங்களூரு பேருந்தினை ஊருக்குள் சென்று,செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.