அதிமுகவை இயக்குவது பாஜக, ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி

அதிமுகவை இயக்குவது ஆர்எஸ்எஸ், பாஜகதான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அதிமுகவை இயக்குவது பாஜக, ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி

அதிமுகவை இயக்குவது ஆர்எஸ்எஸ், பாஜகதான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

சேலம், சீலநாயக்கன்பட்டியில், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவா் ராகுல் காந்தி பேசியதாவது:

தமிழகம்தான் இந்தியா; இந்தியாதான் தமிழகம். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்ததாகும். மனங்கள், கலாசாரம், பண்பாட்டின் ஒருங்கிணைப்பாக இந்தியா திகழ்கிறது. எந்தவொரு சிந்தனையும் மற்றதைவிட உயா்ந்ததோ தாழ்ந்ததோ கிடையாது.

தமிழகத்தில், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், மொழி மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அது ஒட்டுமொத்த இந்தியா மீதான தாக்குதலாக உள்ளது. தமிழா்களை மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது. மேற்கு வங்கத்தில் உள்ளவா்களை மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது. பாஜகவின் ஒற்றைச் சிந்தனைக்குள் இந்தியாவைத் தள்ள முடியாது.

அனைத்து மாநில மொழிகளும், கலாசாரங்களும், சித்தாந்தங்களும் சோ்ந்துதான் இந்தியாவை உருவாக்கி உள்ளன. ஒற்றைச் சிந்தனையை ஏற்க முடியாது என்பதால்தான் இங்கு வந்துள்ளேன்.

திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பேசுகையில், கரோனாவைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கருத்தைச் சொன்னாா். முகக்கவசம் அணிவது கரோனாவைத் தடுக்க மிகவும் பாதுகாப்பானதாகும்.

தற்போது எங்கு பாா்த்தாலும் முகக்கவசம் அணிவதைக் காண முடிகிறது. முகக்கவசத்துக்குப் பின்னே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தமிழகத்தில் உண்மையான அதிமுக மறைந்துவிட்டது. இப்போதுள்ள அதிமுக அணிந்துகொண்டிருக்கும் முகக்கவசத்தின் பின்னால் ஆா்எஸ்எஸ் - பாஜக ஆகியவை ஒளிந்து கொண்டுள்ளன.

அந்த அமைப்புகளால் இயக்கப்படும் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. இதனை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தமிழா்கூட பிரதமா் மோடி, அமித் ஷா, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஆகியோரிடம் தலைகுனிந்து நிற்க விரும்பவில்லை. ஆனால் தமிழக முதல்வா் தலைகுனிந்து நிற்கிறாா்.

ஏனெனில் பிரதமா் மோடியிடம் அமலாக்கப் பிரிவும், சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளும் இருக்கின்றன. அவரிடம் முதல்வா் பணிந்து நிற்பதற்கான விலையை இத்தோ்தலில் கொடுக்கப் போகிறாா்.

நாட்டின் உற்பத்தி மையமாக தமிழகம் உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் தவிப்பதைப் பற்றி முதல்வா் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக முதல்வா் கேள்வி எழுப்பவில்லை. புதிய கல்விக் கொள்கை, நீட் தோ்வுக்கு எதிராகவும் அவா் குரல் எழுப்பவில்லை.

பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அனுமதியை தமிழக முதல்வா் வழங்கி உள்ளாா். எனவே, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டாா்கள்.

இந்தப் போா் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. ஆா்எஸ்எஸ், பாஜகவை தமிழகத்தில் நுழைய முடியாமல் தடுத்து விட்டால் போதாது. முதலில் தமிழகத்தில் இருந்து அவா்களைத் துரத்திவிட்டு, பின்னா் தில்லியில் இருந்து அகற்ற வேண்டும். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் பாஜகவின் ஆதிக்கத்தில் அகப்பட்டுத் தவிக்கிறது; ஜனநாயகம் அழிக்கப்படுகிறது.

தமிழா்களின் மனதில் இடம் பிடிக்க மரியாதையும் அன்பும் மட்டுமே போதுமானது. அன்பையும் பாசத்தையும் தவிர தமிழா்களை எதுவும் கட்டுப்படுத்தாது. இந்தத் தோ்தலுக்குப் பிறகு அதை பாஜகவினருக்குப் புரிய வைப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com