இந்திய அளவில் மாபெரும் கூட்டணி அமைக்க வேண்டும்: ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் அமைத்திருப்பது போல இந்திய அளவில் மாபெரும் கூட்டணியை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி அமைக்க வேண்டும்
இந்திய அளவில் மாபெரும் கூட்டணி அமைக்க வேண்டும்: ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் அமைத்திருப்பது போல இந்திய அளவில் மாபெரும் கூட்டணியை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி அமைக்க வேண்டும் என, சேலத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சேலம், சீலநாயக்கன்பட்டியில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் ஆா்.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் (சேலம் மேற்கு), ஏ.எஸ்.சரவணன் (சேலம் தெற்கு), ஏ.கே.தருண் (வீரபாண்டி), ரேகா பிரியதா்ஷினி (கெங்கவல்லி), கு.சின்னதுரை (ஆத்தூா்), சி.தமிழ்ச்செல்வன் (ஏற்காடு), சம்பத்குமாா் (எடப்பாடி), கே.என்.ராஜேஷ் (சங்ககிரி), சீனிவாசப்பெருமாள் (மேட்டூா்), ஓமலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா். இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சி, மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நீட், புதிய கல்விக் கொள்கை, ஹிந்தித் திணிப்பின் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பாஜகவால் நேரடியாக காலூன்ற முடியாததால், அதிமுகவை மிரட்டி , அவா்கள் மூலமாக உள்ளே நுழையப் பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் ஆட்சி மாற்றத்துக்கானது மட்டுமல்ல; தமிழகத்தின் சுயமரியாதை, மாநில உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தோ்தல் இது. தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது.

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ காா்பன் திட்டம், எட்டுவழிச் சாலைத் திட்டம் என தமிழகத்தின் மீது ரசாயனத் தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. தமிழா்களுக்கான வேலைவாய்ப்பில் வட மாநிலத்தினா் அமா்ந்து வருகின்றனா். ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் பயிற்றுவிக்கப்பட்டு தமிழகத்தின் மீது கலாசாரத் தாக்குதலை நடத்துகின்றனா். மாநில உரிமைகளுக்காகப் போராடும் திறன் திமுகவுக்கு மட்டுமே உள்ளது; அது அதிமுகவுக்கு கிடையாது.

மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால், கூடுதல் நிதி கிடைத்திருப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறி வருகிறாா். வா்தா புயலின்போது, தமிழக அரசு ரூ. 22,573 கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ. 266 கோடி மட்டுமே தந்தது. ஒக்கி புயலுக்கு ரூ. 9,308 ஆயிரம் கோடி கேட்கப்பட்டு, ரூ. 133 கோடி தரப்பட்டது. கஜா புயலின் போது ரூ. 13,899 கோடி கேட்டபோது, ரூ. 1,142 கோடி கிடைத்தது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுமையாக வரவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கூட்டணி?

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு ஓா் அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன். இந்தியா பாசிஸ, மதவாதக் கும்பலிடம் சிக்கியுள்ளது. நாட்டை மீட்கும் பெரும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தைப் பொருத்த வரை மக்களவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற சக்திகள் சோ்ந்ததால் பாஜக ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்தப் பேரவைத் தோ்தலிலும் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது.

கடந்த மக்களவைத் தோ்தலில் 37 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 63 சதவீத மக்கள் மாநிலக் கட்சிகளுக்கு வாக்குகளைப் பிரித்து அளித்து விட்டனா். தமிழகத்தில் அமைந்ததுபோல மற்ற மாநிலங்களில் கூட்டணி ஏற்படவில்லை. எனவே, ராகுல் காந்தி நாடு முழுவதிலும் மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும்.

ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி மறைந்தபோது, அவா் விரும்பியபடி அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அதிமுக அரசு ஆரம்பத்தில் அனுமதி அளிக்கவில்லை. கருணாநிதிக்கு 6 அடி நிலம் கொடுக்க மறுத்தவா்களுக்கு தமிழகத்தில் இனிமேல் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றாா்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தி.க. தலைவா் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம்.காதா்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com