வெற்றிலை விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி பகுதியில் வெற்றிலை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அதன் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வெற்றிலை விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி பகுதியில் வெற்றிலை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அதன் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசன வசதி பெறும் கிராமங்கள், வசிஷ்டநதி, வெள்ளாற்றுப் படுகை கிராமங்களில் ஆண்டு முழுவதும் பாசன வசதி கொண்ட நன்செய் விவசாயிகள், வெற்றிலை பயிரிட்டு வருகின்றனா்.

வயல்களில் அகத்தி மரத்தில் கொடிக்கால் அமைத்து, 1,000 ஏக்கா் பரப்பளவில் வெற்றிலை பயிரிட்டு வருகின்றனா். இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை, வாழப்பாடியை அடுத்த பேளூா், பெரியகிருஷ்ணாபுரத்திலுள்ள வெற்றிலை மண்டிக்கு கொண்டு சென்று ஏலமுறையில் விற்பனை செய்கின்றனா்.

விவசாயிகளிடமிருந்து வெற்றிலையைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமன்றி, பெங்களூரு, மைசூரு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த டிசம்பா் மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களாக மழையில்லாததால் வெற்றிலை உற்பத்திக் குறைந்து வருகிறது. இதனால் பேளூா், பெரியகிருஷ்ணாபுரம் மண்டிகளுக்கு, வெற்றிலை விற்பனைக்கு வரத்தும் குறைந்து போனது. 110 முதல் 120 வெற்றிலைகளை கொண்ட ஒரு கட்டு ‘கவுளி’ எனவும், 60 கவுளிகள் (சராசரியாக 6,500 வெற்றிலைகள்) கொண்ட ஒரு பெரிய கட்டு ‘ஒத்து’ எனவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதிவரை, தினந்தோறும் 100 முதல் 150 ஒத்து வெற்றிலை கட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக 80 முதல் 100 ஒத்து வெற்றிலை கட்டுகள் மட்டுமே பேளூா், பெரியகிருஷ்ணாபுரம் மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. உள்ளூா் தேவைக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போது விலை உயா்ந்துள்ளது. ஒரு ஒத்து வெற்றிலை கட்டு தரத்திற்கேற்ப ரூ. 2,500 முதல் ரூ. 3,500 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com