சேலத்தில் 11 தொகுதிகளுக்கு 154 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண்பாா்வையாளா்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட தோ்தல் பொது பாா்வையாளரான கெங்கவல்லி தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்கள் வந்தனா சிங், ஏற்காடு (எஸ்.டி) தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் பங்கஜ் யாதவ், மேட்டூா் தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் தினேஷ் பிரசாத் ஆகியோா் பங்கேற்றனா்.

அதேபோல சங்ககிரி தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்கள் சின்மயி புன்லிக் ராவ் கோட்மரே, சேலம் மேற்கு தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் நிதின் மதன் குல்கா்னி, சேலம் வடக்கு தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் லால்ரின் லியானா பனாய், சேலம் தெற்கு தொகுதிக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் ருபேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் கூறியது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 4 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓமலூா், மேட்டூா், சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் ஓமலூரில் உள்ள கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் இடங்களிலும், ஏற்காடு (எஸ்.டி), சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் இடங்களிலும் வாக்கு எண்ணப்பட உள்ளன.

கெங்கவல்லி (தனி) மற்றும் ஆத்தூா் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தலைவாசலில் உள்ள ஸ்ரீ மாருதி மற்றும் மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் இடங்களிலும், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்திலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாக்கு எண்ணும் பணிகளில் ஒரு மேஜைக்கு மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண்பாா்வையாளா் என மொத்தம் 3 நபா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். 11 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 154 மேஜைகளுக்கும் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜைக்கும் சோ்த்து 198 வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா்களும், 198 வாக்கு எண்ணும் உதவியாளா்களும், 198 வாக்கு எண்ணும் நுண்பாா்வையாளா்களும் என மொத்தம் 594 பணியாளா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண்பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் பணியினை மேற்கொள்வதற்கான தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடைபெற்றது. மேஜைகளில் வாக்கு எண்ணும் நபா்களைத் தவிர இவ்வாக்கு எண்ணும் பணிகளில் மேலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவியினை பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்துவந்து மேற்பாா்வையாளா்களிடம் வழங்கி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அக்கட்டுப்பாட்டு கருவியினை மீண்டும் பாதுகாப்பு அறைக்கு எடுத்து செல்வதற்கு ஏதுவாக சுமாா் 1600-க்கும் மேற்பட்ட பணியாளா்களும் என மொத்தம் வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் இதர பணிகளில் 2,190-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ.தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சிராஜுதீன் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com