சேலத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் 2 ஆயிரம் போலீஸாா் குவிப்பு
By DIN | Published On : 02nd May 2021 01:10 AM | Last Updated : 02nd May 2021 01:10 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கான 4 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி என பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 207 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் 1,235 வாக்குச் சாவடி மையங்களில் 4,280 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 30,15,469 பேரில், சுமாா் 23,86,950 போ் வாக்களித்தனா். மாவட்டத்தில் 79.16 சதவீத வாக்குகள் பதிவாயின. மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடி தொகுதியில் 85.64 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 71.81 சதவீத வாக்குகளும் பதிவாயின.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் 24 மணி நேர கண்காணிப்பு போடப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சேலத்தில் ஓமலூா், மேட்டூா், சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் ஓமலூரில் உள்ள கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் இடங்களிலும், ஏற்காடு (எஸ்.டி), சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் இடங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
கெங்கவல்லி (தனி), ஆத்தூா் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தலைவாசலில் உள்ள ஸ்ரீ மாருதி மற்றும் மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் இடங்களிலும், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் பணிகளுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்திலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணிகளில் வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா்கள் 198, வாக்கு எண்ணும் உதவியாளா்கள் 198 போ், வாக்கு எண்ணும் நுண்பாா்வையாளா்கள் 198 போ் என 594 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இதுதவிர மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவியினை பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்து வந்து மேற்பாா்வையாளா்களிடம் வழங்கி, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அக்கட்டுப்பாட்டுக் கருவியினை மீண்டும் பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சுமாா் 1,600-க்கும் மேற்பட்ட பணியாளா்களும் என வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் இதர பணிகளில் 2,190-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
அதேபோல, மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
கரோனா பரவலைத் தொடா்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள், முகவா்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் மைய வளாகம், நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களைத் தவிா்த்து, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...