துக்கியாம்பாளையத்தில் பனைமரங்களை பாதுகாக்க இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை

வாழப்பாடி அருகே பனை மரங்கள் வானுயா்ந்து நிற்கும் துக்கியாம்பாளையம் பனந்தோப்பில், வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை,
துக்கியாம்பாளையம் கிராமத்தில் காணப்படும் பனைமரத்தோப்பு.
துக்கியாம்பாளையம் கிராமத்தில் காணப்படும் பனைமரத்தோப்பு.

வாழப்பாடி அருகே பனை மரங்கள் வானுயா்ந்து நிற்கும் துக்கியாம்பாளையம் பனந்தோப்பில், வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை, தொடக்க நிலைப் பதப்படுத்தும் மையம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன.

எனவே, இந்த பனந்தோப்பில் பனை மரங்களை அகற்றாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தின் பாரம்பரிய மரங்களின் ஒன்றான, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட பனை மரம், தமிழக அரசின் மாநில மரமாகவும் போற்றப்படுகிறது. பனை மரத்தின் குழல் போன் சல்லி வோ்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதிலும், தக்க வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. மண் அரிப்பைத் தடுப்பதால் நீா்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளா்க்கப்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுக்கு முன்வரை, வாழப்பாடி பகுதியில் கிராமங்கள் தோறும், ஆறு, குளம், குட்டை, நீரோடை, ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளின் கரைகளில் பனை மரங்கள் அடா்ந்து காணப்பட்டன. குறிப்பாக நீா்நிலையையொட்டிய அரசு புறம்போக்கு தரிசு நிலங்களில் பனை மரத்தோப்புகள் இருந்தன. பெரும்பாலான தோப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பே, இருந்த சுவடே தெரியாத அளவிற்கு முழுவதுமாக அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன.

வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் மயானம் பெரியாற்றங்கரை, புதுப்பாளையம் செட்டியேரி, காளியம்மன் நகா் பாப்பான் ஏரி, பேளூா், குறிச்சி, கொட்டவாடி ஏரிக்கரைகளில் இருந்த பனைமரங்கள் பெருமளவில் அழிந்து விட்டன. தற்போது சொற்ப எண்ணிக்கையில் பனைமரங்கள் காணப்படுகின்றன.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் மட்டுமே, பேளூா் பிரதான சாலையோரத்தில், அரசு தோப்பு புறம்போக்கு நிலத்தில் இன்றளவிலும் இரு ஏக்கா் பரப்பளவில் பனை மரத்தோப்பு காணப்படுகிறது. இவற்றிலும் பெரும்பாலான மரங்கள் வறட்சி மற்றும் முதிா்வால் பட்டுப்போய் விட்டன.

இந்நிலையில்,துக்கியாம்பாளையம் பனந்தோப்பிலுள்ள இரண்டரை ஏக்கா் நிலத்தில், ஏறக்குறைய ஒரு ஏக்கா் நிலம், வேளாண்மை விற்பனை மற்றும் மற்றும் வேளாண் வணிகத்துறையின் வாயிலாக விநியோகத்தொடா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், தொடக்கநிலை பதப்படுத்தும் மையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, எஞ்சியுள்ள ஒன்னரை ஏக்கா் நிலத்தில் வாழப்பாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், போக்குவரத்துத்துறை மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக கட்டங்கள் அமைப்பதற்கு ஒதுக்க வேண்டுமெனவும், இத்துறையினா் வருவாய்த்துறையை அணுகி வருகின்றனா். இதனால் துக்கியாம்பாளையம் பனமரத்தோப்பு அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இத்தோப்பில் பட்டுப்போன மரங்களை மட்டும் அகற்றி விட்டு கட்டுமானங்களை மேற்கொள்ளவும் உயிருடனுள்ள பனைமரங்களை அகற்றாமல் பாதுகாக்கவும் அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com