வாழப்பாடி பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு

வாழப்பாடி பகுதியில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் அதன் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வாழப்பாடியை அடுத்த மேலூா் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் பறிக்கப்படாமல் விடப்பட்ட கனகாம்பரம் பூக்கள்.
வாழப்பாடியை அடுத்த மேலூா் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் பறிக்கப்படாமல் விடப்பட்ட கனகாம்பரம் பூக்கள்.

வாழப்பாடி பகுதியில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் அதன் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, திருமனுாா், கம்மாளப்பட்டி, பேளூா், தும்பல், கூட்டாத்துப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கிணறு, ஆழ்துளை பாசன முறையில் 1,000 ஹெக்டோ் பரப்பளவில், மல்லிகை, குண்டுமல்லி, காக்கட்டான், சம்பங்கி, அரளி, செவ்வரளி, செண்டுமல்லி, நந்தியாவட்டம், துளசி, துளக்கமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டு வருகின்றனா்.

வாழப்பாடி சுற்றுப்புறக் கிராமங்களில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பூக்களையும், வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் தினசரி சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனா். இங்கு தினந்தோறும் 8,000 கிலோ அளவிற்கு பல்வேறு ரக பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

கடந்த இரு மாதங்களாக கோடை வெய்யில் தாக்கத்தால் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 4,000 கிலோ அளவிற்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, திருமணம், இறுதிச் சடங்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், பூக்களின் தேவை குறைந்துபோனது. இதனால் அனைத்து ரக பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மாதம் ரூ. 300 முதல் ரூ. 400 வரை விலை போன ஒரு கிலோ மல்லிகை, குண்டு மல்லி, கனகாம்பரம் பூக்கள் கடந்த இரு தினங்களாக அதிகபட்சமாக ரூ. 60க்கு மட்டுமே விலை போகிறது. செவ்வரளி, பல்வேறு ரக ரோஜா பூக்கள், சாமந்தி, சம்பங்கி பூக்களும் ஒரு கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரையும், துளக்கமல்லி, கலா்ப்பூ, நந்தியாவட்டம், கோழிக்கொண்டை பூக்கள் ஆளில்லாததால் கிலோ ரூ. 10 மட்டுமே விலை போகிறது. இதனால், பூக்களைப் பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்கே போதிய விலை கிடைக்காததால் பூந்தோட்டம் அமைத்து பராமரித்து வரும் வாழப்பாடி பகுதி விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனா். பூக்கள் சாகுபடி செய்யும் வாழப்பாடி பகுதி விவசாயிகளின் நலன் கருதி, ஆண்டு முழுவதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு, பூக்களை பதப்படுத்தி, வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com